எதிர்காலத்தில் பொருட்களை விநியோகம் செய்ய மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துள்ளீர்களா? ஆம், விரைவில் ஜெர்மனி வீதிகளில் உலா வர உள்ளது இந்த டெலிவரி ரோபோக்கள். இந்த ரோபோவின் பெயர் தியோ (Theo). இது குறித்து DW Tamil யூடியூப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஹேதியோ என்ற நிறுவனம் இந்த ரோபோக்களை உருவாக்கியுள்ளது. ஹேதியோ இணை நிறுவனரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அஷ்வின் ராமச்சந்திரன் இந்த ரோபோக்களை உருவாக்கியுள்ளார். அவர் கூறுகையில், "இது ஒரு உயர் தொழில்நுட்ப ரோபோ. தன்னிச்சையாக இயங்கும் இந்த ரோபோவின் பெயர் தியோ (Theo) . இது கார்கோ பைக் அடிப்படையாக கொண்ட தானியங்கி வாகனம். இலகு ரக மின்சார வாகனம். சென்சார்களைப் பொறுத்தவரை தானியங்கி கார்களில் உள்ளது போல் செயல்படுவதால் இது மிகவும் பாதுகாப்பானது. இது ஜெர்மனி வீதிகளில் நாம் பார்க்கும் முதல் எல்.4 தானியங்கி வாகனமாக இருக்கும்.
தனி மேற்பார்வையாளர்
தியோவில் பொறுத்தப்பட்டுள்ள கேமராக்கள், சென்சார்கள் சுற்றியுள்ள அனைத்தையும் பார்க்க உதவும். தன்னை சுற்றியுள்ள தடைகள், பாதசாரிகள் உள்ளிட்டவற்றை இது அடையாளம் காணும். மேலும் தியோ தானாகவே சுற்றி வரும் திறனுடையது. இது போன்ற அமைப்புகளை முழுமையாக நம்பக்கூடிய நிலை ஜெர்மனியில் தற்போது இல்லை. எனவே கணினி நுண்ணறிவுக்கு துணை போகும் வகையில் கருத்துகளை உள்ளீடு செய்ய மனித நுண்ணறிவுகளை பயன்படுத்துகிறோம்.
ஜெர்மனியின் புதிய சட்டத்தின்படி தானியங்கி வாகனங்களுக்கு அனுமதி உண்டு. எல்.4 தானியங்கி வாகனங்களை கண்காணிப்பதற்கு என்றே ஒரு மேற்பார்வையாளர் எப்போதும் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
தானியங்கி கார்கள், பேருந்துகள் போல இந்த தானியங்கி ரோபோக்களும் பயன்படுத்தப்படலாம். தியோ ஒரு விபத்தை ஏற்படுத்தினால் அதன் உரிமையாளர் தான் பொறுப்பேற்க வேண்டும். இது ரிமோட் கன்ரோல் மூலம் பயன்படுத்தப்படும் என்பதால் ஒவ்வொரு வாகனங்களுக்கும் தனி தனி ஓட்டுநர் இருக்க மாட்டார்கள். இது டெலிவரிக்கான செலவை 3-ல் 1 பங்கு குறைக்கிறது.
மிகவும் சவாலானது
இருப்பினும் இந்த ரோபோ இன்னும் முழுமையாக தயார் செய்யப்படவில்லை. அஷ்வின் ராமச்சந்திரனுக்கு இன்னும் வேலைகள் உள்ளன. தற்போது மாதிரி ரோபோக்களை பல சவால்களுடன் மேம்படுத்தி வருகிறார்.
அஷ்வின் ராமச்சந்திரன் கூறுகையில், "இது ஒவ்வொரு அமைப்பும் மிகவும் சவாலானது. ஆனால் இதன் மீது மிகுந்த ஆர்வம் உள்ளதால் பெரிதாக தெரியவில்லை. ஒரு வேலை இது கடினமாக இல்லை என்றால் இது ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்காது" என்றார்.
யார் இவர்?
சில வாரங்களுக்கு முன் இந்த ரோபோ இத்தாலிக்கு கொண்டு செல்லப்பட்டது. மக்கள் நடமாட்டம் உள்ள தெருக்களில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போதைக்கு இதற்கு காவல்துறை பாதுகாப்பு தேவை. ஆனால் அடுத்த ஆண்டு இது பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.
“இந்த ரோபோக்கள் பார்சல் டெலிவரியின் எதிர்காலமாக இருக்கும்” என்று அஷ்வின் ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரோபோவை உருவாக்கிய அஷ்வின் ராமச்சந்திரன் தமிழ் திரைத்துறை இசையமைப்பாளர், நடிகர் Hip Hop ஆதியின் உடன்பிறந்த தம்பி ஆவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.