/indian-express-tamil/media/media_files/2025/10/10/diwali-sale-scams-surge-2025-10-10-22-25-42.jpg)
தீபாவளி விற்பனையில் மோசடி வலை: உஷார்! போலி இணையதளங்களைக் கண்டுபிடிப்பது எப்படி?
பண்டிகைக் கால விற்பனைகள் ஷாப்பிங் ஆஃப்கள் மற்றும் இன்பாக்ஸ்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், மோசடி எச்சரிக்கைகளும் அதே வேகத்தில் அதிகரித்து வருகின்றன. ஒரு வினாடி வினாவில் பங்கேற்பதற்காக "இலவச தீபாவளிப் பரிசுகளை" அமேசான் வழங்குவதாகக் கூறும் பாப்-அப் விளம்பரத்தையோ? உங்க டெலிவரி தோல்வியடைந்துவிட்டதாகவும், முகவரியைப் புதுப்பிக்க ஒரு லிங்க்-ஐ கிளிக் செய்யுமாறும் "இந்தியா போஸ்ட்"-இடம் இருந்து வரும் செய்தியையோ நீங்க பார்த்தீர்களா? இவை அனைத்தும் அவசரப்படும் வாடிக்கையாளர்களை ஏமாற்ற வடிவமைக்கப்பட்ட இந்தக் காலத்தின் மிகவும் பொதுவான மோசடிகளில் சில.
"ஆஃபர் லிங்க் கிளிக் செய்வதற்கு முன் சரிபார்க்கவும்"
"தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் நெருங்கி வருவதால், மக்கள் குறிப்பிட்ட காலச் சலுகைகளைப் பெற விரைந்து செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் பண்டிகை விற்பனையைத் தேடுகிறார்கள், ஆனால் பெரும்பாலும் ஒரு லிங்க் கிளிக் செய்துவிட்டு, அதன் நம்பகத்தன்மை பின்னர் சரிபார்க்கிறார்கள்," என்று 63SATS சைபர்டெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் இணை தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீனிவாஸ் எல். தெரிவித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அவர் மேலும் கூறுகையில், "சைபர் பாதுகாப்பு குழுக்கள் இந்த பண்டிகைக் கால ஷாப்பிங் கவர்ச்சிகள் குறித்து மக்களை எச்சரித்துள்ளன. போலியான சான்றிதழ்களுடன் கூடிய லோகோக்கள், போலியான இணைய வர்த்தக வெப்சைட் வாடிக்கையாளர்களுக்கு நம்பும்படி ஆக்குகின்றன. இந்த வெப்சைட் எப்போதும் 'நம்ப முடியாத அளவிற்கு' குறைந்த விலையை வழங்குவதன் மூலம் வாங்குபவர்களை ஈர்க்கின்றன."
அமேசான் நிறுவனத்தின் எச்சரிக்கை
இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம்-க்கு அளித்த பேட்டியில் பேசிய அமேசான் இந்தியாவின் சட்டப்பிரிவு துணைத் தலைவர் ராகேஷ் பக்ஷி, "ஷாப்பிங் அளவு அதிகரிக்கும்போது பண்டிகைக் காலத்தில் மோசடி முயற்சிகள் அதிகரிக்கின்றன. இந்த மோசடிக்காரர்கள் பெரும்பாலும் அமேசானுக்கு வெளியே செயல்படுகிறார்கள். போலி மின்னஞ்சல்கள், எஸ்.எம்.எஸ்., கால்ஸ் மூலம் அவசர நிலையை உருவாக்க நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். வாடிக்கையாளர்களைத் தீங்கு விளைவிக்கும் லிங்க் கிளிக் செய்ய அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிரத் தூண்டும் வகையில், அக்கவுண்ட் நிறுத்தப்பட்டதாக அல்லது ஆர்டருக்குப் பணம் சரிபார்ப்பு தேவைப்படுவதாகக் கூறிப் போலியான 'ஆர்டர்' அல்லது 'அக்கவுண்ட்' பிரச்னைகளை உருவாக்குவது பொதுவான மோசடிகள்," என்றார்.
"கடந்த ஓராண்டில், 55,000-க்கும் மேற்பட்ட ஃபிஷிங் இணையதளங்களையும், 12,000 மோசடி தொலைபேசி எண்களையும் முடக்கி உள்ளோம். மேலும், பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக மோசடி விழிப்புணர்வு செய்திகளைப் பரப்ப இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்துடன் (I4C) நாங்கள் இணைந்துள்ளோம்," என்று அவர் கூறினார். மேலும், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் ஷாப்பிங் செய்ய உயர்தொழில்நுட்பம், செயல்திறன் மிக்க பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
பண்டிகை விற்பனை மோசடிகள் எவ்வாறு வேலை செய்கின்றன?
சைபர் பாதுகாப்பு நிபுணர் சுபம் சிங் கூறுகையில், "மோசடிக்காரர்கள் பெரும்பாலும் அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட் போன்ற பிரபலமான பிராண்டுகளைப் போலவே இருக்கும் போலியான ஷாப்பிங் இணையதளங்கள் அல்லது ஆன்லைன் விளம்பரங்களை உருவாக்குகிறார்கள். நம்ப முடியாத டிஸ்கவுண்ட் மற்றும் குறிப்பிட்ட கால ஆஃபர் மூலம் அவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள். வாடிக்கையாளர் ஆர்டர் செய்து பணம் செலுத்தியவுடன், அவர்களுக்கு ஒன்று போலி பொருட்கள் கிடைக்கும் அல்லது எதுவும் கிடைக்காது," என்றார்.
"இந்த மோசடிகளை நம்பும்படி ஆக்குவது, அவை விவரங்களில் செலுத்தும் கவனம்தான். போலியான வெப்சைட் பெரும்பாலும் அதிகாரப்பூர்வ பிராண்ட் லோகோக்கள், படங்கள் மற்றும் உண்மையான தளங்களைப் போலவே தோற்றமளிக்கும் மெருகூட்டப்பட்ட வடிவமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. சில சமயங்களில் அவை உண்மையான இணையதளத்தின் தளவமைப்பு மற்றும் டொமைன் பெயரைக் கூட குளோன் செய்கின்றன, இதனால் வாடிக்கையாளர்கள் வித்தியாசத்தைக் கண்டறிவது மிகவும் கடினம்," என்றும் சிங் கூறினார்.
மோசடியின் அறிகுறிகள் (Red Flags):
மோசடியைத் தவிர்க்க உதவும் சில முக்கிய அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வித்தியாசமான அல்லது தவறாக எழுதப்பட்ட URL-கள் (எ.கா., amaz0n-sale.com), முகவரிக்கு முன் ‘https://’ அல்லது பூட்டு ஐகான் (padlock icon) இல்லாதது, அக்கவுண்ட் அல்லது பணம் செலுத்தும் விவரங்களைக் கேட்கும் SMS, வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் லிங்க், நம்ப முடியாத அளவிற்கு மலிவான விலைகள், தவறான ஸ்பெல்லிங், போலியான ரிவ்யூ அல்லது தொடர்பு விவரங்கள் இல்லாதது.
ஆன்லைன் பணம் செலுத்தும் விருப்பங்கள் மட்டுமே இருப்பது, பணம் டெலிவரி (Cash on Delivery) கேஷ் ஆன் டெலிவரி, "கணக்கு நிறுத்தப்பட்டது" அல்லது "ஆர்டர் சரிபார்ப்பு தேவை" போன்ற அவசரச் செய்திகள், ஓடிபி, பாஸ்வேர்ட் அல்லது அட்டை விவரங்களைக் கோருவது (அமேசான் ஒருபோதும் இவற்றைக் கேட்காது).
மோசடியை சந்தேகித்தால் என்ன செய்ய வேண்டும்?
"வாடிக்கையாளர்கள் மோசடியைச் சந்தேகித்தால், சற்று நிறுத்திச் சரிபார்க்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். நீங்க அமேசானில் ஷாப்பிங் செய்கிறீர்கள் என்றால், உங்க ஆர்டர்களைச் சரிபார்க்க பாதுகாப்பான வழி, ஷாப்பிங் செயலியிலோ அல்லது amazon.in தளத்திலோ உள்ள ‘உங்க ஆர்டர்கள்’ (Your Orders) பிரிவைப் பார்ப்பதுதான். அதில் அந்த ஆர்டர் பட்டியலிடப்படவில்லை என்றால், அது உண்மையானது அல்ல," என்று பக்ஷி கூறினார்.
அமேசான் ஆள்மாறாட்ட மோசடிகளுக்கு:
அனைத்து அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களும் “@amazon.in” (அ) “@amazon.com” இல் முடிவடையும் முகவரிகளிலிருந்து மட்டுமே வரும். எஸ்.எம்.எஸ். (SMS) அப்டேட் ஒருபோதும் தனிப்பட்ட விவரங்கள் அல்லது பணம் செலுத்தும் தகவலைக் கேட்காது. மோசடிகளைச் சந்தேகித்தால், உடனடியாக stop-spoofing@amazon.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கலாம். கூடுதல் பாதுகாப்பிற்காக 2 ஸ்டெப் சரிபார்ப்பை (Two-Step Verification) வாடிக்கையாளர்கள் செயல்படுத்தலாம்.
போலி தளத்தில் பணம் செலுத்திவிட்டால்:
உடனடியாக உங்க வங்கியை அழைத்து உங்கள் அட்டை அல்லது UPI கணக்கைத் தடுக்கவும். cybercrime.gov.in என்ற இணையதளத்தில் மோசடியைப் புகாரளிக்கவும். ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களை வைத்திருக்கவும். நிதி மோசடி உதவி எண்ணான 1930-ஐ அழைக்கவும். மற்றவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அவர்களை எச்சரிக்கவும்.
"விரைவாகப் புகாரளிப்பது உங்கள பாதுகாப்பதுடன், மற்றவர்கள் குறிவைக்கப்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது. நினைவில் கொள்ளுங்கள். ஒரு ஆர்டர், செய்தி அல்லது சலுகை உங்கள் அமேசான் கணக்கில் தெரியவில்லை என்றால், அது உண்மை அல்ல," என்று பக்ஷி வலியுறுத்தினார்.
அமேசான், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்துடன் (I4C) இணைந்து #ScamSmartIndia பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. மேலும், சிபிஐ, மாநில காவல்துறை மற்றும் சைபர் கிரைம் பிரிவுகளுடன் இணைந்து விழிப்புணர்வு மற்றும் விசாரணை பயிற்சிகளை அளிக்கிறது. CYBX போன்ற மொபைல் சைபர் பாதுகாப்பு பயன்பாடுகள் நிகழ்நேரத்தில் ஃபிஷிங் இணைப்புகள் குறித்து உங்களை எச்சரிக்கும் என்று ஸ்ரீனிவாஸ் எல். தெரிவித்தார். இந்த பண்டிகை காலத்தில், எச்சரிக்கையுடன் இருப்பது, ஒவ்வொரு ஆபரையும் சரிபார்ப்பது, மற்றும் பணம் செலுத்துவதற்கு முன் ஒரு நிமிடம் நிறுத்தி உங்க கொண்டாட்டங்கள் மோசடி இல்லாததாக இருப்பதை உறுதி செய்யும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.