/indian-express-tamil/media/media_files/2025/09/18/e-aadhaar-app-launch-in-india-2025-09-18-13-51-56.jpg)
ஆதார் அப்டேட் இனி உங்க கையில்... வருகிறது 'ஆல் இன் ஒன்' புதிய இ-ஆதார் ஆஃப்!
ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ். இனிமேல் ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. மத்திய அரசு, ஆதார் பயனர்களுக்காகப் புதிய மொபைல் செயலியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தச் செயலி, உங்கள் ஆதார் தகவல்களை ஸ்மார்ட்ஃபோன் மூலமாகவே புதுப்பிக்க உதவும். இந்தச் செயலி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த செயலியின் முதன்மை நோக்கம், பயனர்கள் ஆதார் சேவை மையங்களுக்கு நேரடியாக செல்லாமல், தனிப்பட்ட விவரங்களை ஆஃப் மூலமாக புதுப்பித்துக்கொள்வதுதான்.
ஆதார் அப்டேட் இனி உங்கள் கைகளில்!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உருவாக்கும் இந்தச் செயலி, பயனர்களின் வாழ்க்கையை மிக எளிதாக்கப் போகிறது. பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்கள் மாற்ற, இனிமேல் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்தாண்டு இறுதிக்குள் இந்தச் செயலி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செயலியின் பலன்கள்:
நேரம் மிச்சம்: ஆதார் சேவை மையங்களுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே புதுப்பித்துக் கொள்ளலாம்.
பாதுகாப்பு: செயற்கை நுண்ணறிவு (AI), முக அடையாளம் (Face ID) தொழில்நுட்பங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளதால், இது பாதுகாப்பானது.
மோசடிக்கு முற்றுப்புள்ளி: டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சரிபார்ப்பதன் மூலம், அடையாள மோசடிகள் பெருமளவில் குறையும்.
இ-ஆதார் என்றால் என்ன?
புதிய ஆதார் மொபைல் ஆப், பயனர்கள் தங்கள் பெயர், குடியிருப்பு முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட விவரங்களை தங்கள் ஸ்மார்ட்ஃபோனிலிருந்தே புதுப்பிக்க உதவும். இந்த டிஜிட்டல் தீர்வு, பதிவு மையங்களுக்கு நேரில் செல்வதை குறைப்பதை நோக்கமாக கொண்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முக அடையாளம் (Face ID) தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தச் செயலி நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற டிஜிட்டல் ஆதார் சேவைகளை வழங்கும்.
என்னென்ன தகவல்களைப் புதுப்பிக்கலாம்?
இந்த ஆப்பில் பிறப்புச் சான்றிதழ்கள், பான் கார்டு, பாஸ்போர்ட்டுகள், ஓட்டுநர் உரிமங்கள், ரேஷன் அட்டைகள் போன்ற அரசு ஆவணங்களுடன் தானாகவே இணைக்கப்பட்டு, உங்கள் தகவல்களைச் சரிபார்க்கும். மேலும், மின்சாரக் கட்டண விவரங்களைக் கொண்டும் உங்கள் முகவரியைச் சரிபார்க்கும் வசதியும் இதில் சேர்க்கப்படலாம்.
நவம்பர் மாதம் முதல், கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேனிங் போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு மட்டுமே மையங்களுக்குச் செல்ல வேண்டும் என யு.ஐ.டி.ஏ.ஐ தெரிவித்துள்ளது. ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் மிகவும் விரைவானதாகவும், வசதியானதாகவும் மாற்றும். யு.ஐ.டி.ஏ.ஐ-யின் இந்த புதிய நடவடிக்கை, அப்டேட் செயல்முறையை எளிதாக்குவது, விரிவான பைல்களின் தேவையைக் குறைப்பது, அடையாள மோசடி அபாயங்களைக் குறைப்பது, மற்றும் முழு செயல்முறையையும் விரைவுபடுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு மேலும் எளிமையாக மாற்ற, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) 'ஆதார் குட் கவர்னன்ஸ் போர்ட்டல்' என்ற ஒரு தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆதார் சேவைகளை இன்னும் எளிமையாக்கி, அனைவருக்கும் அணுகக் கூடியதாக மாற்ற உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.