/indian-express-tamil/media/media_files/2025/05/27/0MC36jrQSOpYAQHD2mCW.jpg)
இந்தியாவின் இ-பாஸ்போர்ட்: யாருக்கெல்லாம் கிடைக்கும், தகுதி, பயன்கள், விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட் (e-passport) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த புதிய வகை பயண ஆவணத்திற்கு தற்போது நாடு முழுவதும் விண்ணப்பிக்கலாம். வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் ஏப்.1, 2024 அன்று சோதனை அடிப்படையில் இந்த திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது, ஒருசில பாஸ்போர்ட் அலுவலகங்களில் மட்டுமே இந்த இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், வரும் மாதங்களில் இந்த சேவையை படிப்படியாக மற்ற அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சாதாரண பாஸ்போர்ட்களிலிருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்ட, இதன் முன் அட்டையில், தலைப்புக்குக் கீழே சிறிய தங்க நிற சின்னம் அச்சிடப்பட்டிருக்கும்.
இந்தியாவின் இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?
இந்தியாவின் இ-பாஸ்போர்ட் என்பது, பாரம்பரிய பாஸ்போர்ட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இதில், உடல்சார்ந்த மற்றும் டிஜிட்டல் அம்சங்கள் இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் முன் அட்டையில் ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) சிப் மற்றும் ஒரு அன்டெனா ஆகியவை உட்பொதிக்கப்பட்டுள்ளன. இந்த சிப், பயோமெட்ரிக் தகவல்களான கைரேகைகள், டிஜிட்டல் போட்டோ, தனிப்பட்ட விவரங்களான பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் எண் போன்றவற்றை பாதுகாப்பாகச் சேமித்து வைக்கிறது.
அடுத்த தலைமுறை இ-பாஸ்போர்ட்டின் முக்கிய அம்சங்கள்:
பாஸ்போர்ட்டின் முன் அட்டையில் மின்னணு சிப் பொருத்தப்பட்டுள்ளது. கைரேகைகள், முகப் படம் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டுள்ளது. தனிப்பட்ட விவரங்களான பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கியது. பாதுகாப்பிற்காக என்க்ரிப்ட் செய்யப்பட்ட அணுகலுடன் கூடிய காண்டாக்ட்லெஸ் சிப் பயன்படுத்தப்படுகிறது. ICAO (International Civil Aviation Organization) வழிகாட்டுதல்களின்படி உருவாக்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்கள் தயாரிக்கும் வாய்ப்புகளை இது குறைக்கிறது.
இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை:
இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை, வழக்கமான பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதைப் போன்றே உள்ளது.
படி 1: அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்திற்குச் செல்லவும்.
படி 2: புதிய கணக்கைப் பதிவு செய்து, இ-பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
படி 3: உங்களுக்கு அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK), அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராவைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 4: ஆன்லைன் மூலம் இ-பாஸ்போர்ட்டுக்கான கட்டணத்தைச் செலுத்தவும்.
படி 5: நீங்கள் தேர்ந்தெடுத்த மையத்தில் சந்திப்புக்கு (Appointment) நேரத்தை முன்பதிவு செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.