/tamil-ie/media/media_files/uploads/2022/11/aadhaar-eb-meter.jpg)
தமிழகத்தில் மின் நுகர்வோர் எண் - ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் என அனைத்து பயனர்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும். தமிழக அரசு இதற்கான ஆணை வெளியிட்டுள்ளது. மின் வாரிய அலுவலகங்களுக்கு சென்று நேரடியாகவோ அல்லது நீங்களாகவே ஆன்லைன் மூலமாகவோ இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் https://nsc.tnebltd.gov.in/adharupload/ அதிகாரப்பூர்வ இணையபக்கத்தில் மின் இணைப்பு எண் – ஆதார் இணைக்கலாம்.
மின் வாரிய அலுவலகங்களில் நேரடியாக உங்கள் ஆதார் அட்டை, மின் பயன்பாட்டு அட்டை கொண்டு சென்று இணைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இ.பி - ஆதார் எண் இணைக்கும் போது உங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்படலாம். குறிப்பாக வீட்டின் உரிமையாளர், வாடகைதாரர்கள் எவ்வாறு இணைப்பது, இறந்தவர் பெயரில் மின் இணைப்பு இருந்தால் என்ன செய்வது போன்ற சந்தேகங்களுக்கு இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.
இ.பி - ஆதார் எண் இணைப்பு
- முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையபக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவிடவும்.
- அடுத்து மின் இணைப்புடன் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை பதிவிடவும். அந்த எண்ணிற்கு OTP வரும். அதை கொடுத்து ஆதார் எண், ஆதாரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- இப்போது 3 ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் இந்த மின் இணைப்பின் உரிமையாளர், வாடகைதாரர் மற்றும் 3-வதாக வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளது என்ற ஆப்ஷன்கள் வரும். இதை நீங்கள் தேர்ந்தெடுத்து சப்மிட் கொடுக்க வேண்டும்.
வாடகைதாரர்கள் எவ்வாறு இணைப்பது?
உங்கள் ஆதார், ஆதார் எண் பதிவிட்ட பிறகு 3 ஆப்ஷன்கள் வரும். நீங்கள் இந்த மின் இணைப்பின் உரிமையாளரா, வாடகைதாரரா மற்றும் கடைசியாக வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளது என்ற ஆப்ஷன்கள் வரும். இதில் நீங்கள் 1 ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். வாடகைதாரர்கள் வாடகைதாரர் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
சில இடங்களில் வாடகைதாரர்களுக்கு தனியாக மின் அட்டை கொடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் அந்த மின் இணைப்பு எண், அவர்கள் ஆதாரையே பயன்படுத்தி இணைக்கலாம். இவ்வாறு செய்யும் போது மின் இணைப்பு வாடகைதாரர் பெயரில் மாறி விடுமோ? என்ற அச்சம் வேண்டாம். மின் இணைப்பு வீட்டு உரிமையாளர் பெயரில் மட்டுமே இருக்கும்.
பல மின் இணைப்புகள்
ஒருவர் எவ்வளவு மின் இணைப்பு வைத்திருந்தாலும் அவர்களுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மானிய சலுகைகள் இருந்தால் அதுவும் வழங்கப்படும். இ.பி - ஆதார் எண் இணைப்பால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்தார்.
அதேபோல் பல மின் இணைப்பு வைத்திருப்பவர்களும் ஒரே ஆதார் கொண்டு இணைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் பெயரில் மின் இணைப்பு
தாத்தா/அப்பா பெயரில் மின் இணைப்பு உள்ளது. ஆனால், அவர்கள் இறந்துவிட்டனர். ஆதார் இணைப்பது எப்படி என்றால், மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யாவிட்டாலும், ஆதார் இணைக்கலாம். புதிதாக யார் பெயரில் மின் இணைப்பு மாற்றம் செய்ய விரும்புகிறீர்களோ அவரது பெயரில் உள்ள ஆதார் எண்ணை இணைக்கலாம். அவரது ஆதார் எண், ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யலாம்.
சிறப்பு முகாம்
இ.பி - ஆதார் எண் இணைக்க தமிழகம் முழுவதும் டிசம்பர் 31-ம் தேதி வரை அந்தந்த பகுதிகளில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் மின் பயன்பாட்டு அட்டை, ஆதார் அட்டை கொண்டு சென்று இணைத்துக் கொள்ளலாம். மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் இந்த முகாம் பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.