Elon Musk's $44 Billion Twitter Deal: உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டரை $54.20 மதிப்புள்ள பங்குகளுடன் தோராயமாக 44 பில்லியன் டாலருக்கு(இந்திய மதிப்பில் ரூ3.30 லட்சம் கோடி) வாங்கியுள்ளார். ஏப்ரல் 14 அன்று, எலான் மஸ்க் தனது ஆஃபரை அறிவித்தார். இதுதான் பெஸ்ட் அண்ட் இறுதி ஆஃபர் எனவும் அழைத்திருந்தார்.
மஸ்க் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. சுதந்திரமான பேச்சு என்பது செயல்படும் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். ட்விட்டர் என்பது மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும் டிஜிட்டல் டவுன் சதுக்கமாகும். ஆகவே வரும் நாள்களில் ட்விட்டரில் மேலும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தி மேம்படுத்தவிருக்கிறோம்.
தேவையற்ற செய்திகளை பரப்புவதை தடுப்பதற்கும் அனைத்து மனிதர்களையும் அனுமதிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ட்விட்டர் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. அதனை திறந்திட நிறுவனம் மற்றும் பயனர்களின் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
ஆரம்பத்தில் ட்விட்டரை வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்த போது, அதனை தடுத்திட ‘poison pill defence’ அம்சத்தை அந்நிறுவன நிர்வாக குழு கையில் எடுத்தது. இருப்பினும், மஸ்க் நிதியுதவி பெற்றதாக அறிவித்தவுடன், வாரியம் டெஸ்லா இணை நிறுவனருடன் பேச்சுவார்த்தையில் இறங்கியது.
வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கூற்றுப்படி, வெள்ளியன்று, மஸ்க் நிறுவனத்தின் பல பங்குதாரர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியுள்ளார். மேலும், இதனை விரைவாக முடித்திட வீடியோ அழைப்பு மூலம் வலியறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, மஸ்க் தனது ட்விட்டர் கணக்கில், என்னுடைய மோசமான விமர்சகர்கள் கூட ட்விட்டரில் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அதுதான் பேச்சு சுதந்திரம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
சனிக்கிழமையன்று, உப்பிய வயிறு கொண்ட எமோஜியையும், பில் கேட்ஸ் புகைப்படத்தையும் இணைத்த படம் ஒன்றை ட்வீட்டில் பகிர்ந்துள்ளார் மஸ்க். இந்த ட்வீட் ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. அதற்கு நெட்டிஸ்சன்கள் லரும் பலவிதமாக ரியாக்ட் செய்தனர்.
டெஸ்லா இணை நிறுவனர் கடந்த காலத்தில் ட்விட்டரில் 'எடிட் பட்டன்' கொண்டு வருவது பற்றி, வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியிருந்தார். அதேசமயம், ட்விட்டர் நிர்வாகம் ஏற்கனவே எடிட் பட்டனை அறிமுகப்படுத்தும் திட்டத்தை கையில் எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் இப்போது வெளியாகவில்லை. தற்போது ட்விட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil