ட்விட்டரின் ஆஸ்தான லோகோ நீலக் குருவிக்கு பதிலாக எக்ஸ் ('X') என லோகோ மாற்றப்படுவதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை கடந்தாண்டு உலகப் பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கு உலக நாடுகளில் இருந்து கலவையான வரவேற்புகளைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், ட்விட்டரை ரீ பிராண்ட் செய்யும் வகையில் எலான் மஸ்க் அதன் லோகோவை 'X' என மாற்றுவதாக அறிவித்துள்ளார். ட்விட்டரின் தனித்துவமான லோகோவான நீலக் குருவிக்கு பதிலாக மாற்றப்படுகிறது.
ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாசினோவும் லோகோ மாற்றத்தை உறுதிப்படுத்தினார். ஆடியோ, வீடியோ, மெசேஜிங், பணம் செலுத்துதல் மற்றும் பேக்கிங் போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ட்விட்டர் லோகோ மாற்றப்பட்டது. நீலக் குருவிக்கு பதிலாக டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படம் லோகோவாக மாற்றப்பட்டது. ட்விட்டர் வெப் பயனர்களுக்கு மட்டும் இந்த மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் இது விரைவில் நீலக் குருவிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது நடவடிக்கை மீண்டும் உலக நாடுகளின் கவனம் பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“