உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்தாண்டு வாங்கினார். ட்விட்டர் உரிமையாளர் ஆனதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சி.இ.ஓ உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதைத் தொடர்ந்து ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தார். ஊழியர்களுக்கான சலுகைகளை குறைத்தார்.
ட்விட்டர் ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம், விளம்பரப் பிரிவில் மாற்றம் எனப் பல அதிரடிகளை களமிறக்கினார். மஸ்க்கின் நடவடிக்கைக்கு எதிர்ப்பும், வரவேற்பும் இருந்தன.
இந்நிலையில், அடுத்த நடவடிக்கையாக கட்டணம் செலுத்தி செய்தி படிக்கும் அம்சத்தை றிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். ட்விட்டரில் செய்தி பதிவிடும் நிறுவனங்கள் தங்கள் பயனர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மஸ்க் கூறியுள்ளார். அடுத்த மாதத்தில் இருந்த இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அடுத்த மாதம் முதல் செய்தி நிறுவனங்கள் தங்களின் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு கிளிக் முறையில் பயனர்களிடமிருந்து கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும்" எனக் கூறியுள்ளார். மேலும், மாதாந்திர சந்தாவிற்கு பதிவு செய்யாத பயனர்கள் அவ்வப்போது கட்டுரையைப் படிக்க விரும்பும்போது அந்த ஒரு கட்டுரைக்கு அதிக விலையை செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல செய்தி நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களுக்கு சந்தா கட்டணம் வசூலிக்கும் திட்டம் கொண்டுள்ள நிலையில், தற்போது ட்விட்டரின் இந்த அம்சம் பயனர்களுக்கு குழப்பத்தை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ட்விட்டர் நிறுவனம் தங்கள் பதிவுகள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழி அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறி இருந்த நிறையில், தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“