/indian-express-tamil/media/media_files/2025/09/04/esim-scam-2025-09-04-14-31-03.jpg)
இ-சிம் பயனர்களே உஷார்... ஒரே கிளிக் பேங்க் பேலன்ஸ் காலி! மோசடி கும்பலின் புதிய டெக்னிக்!
இந்தியாவில் இணைய குற்றவாளிகள் இப்போது இ-சிம் (eSIM) பயனர்களை குறிவைத்து மோசடி செய்து வருகின்றனர். இந்த மோசடி மூலம் பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் பணத்தை இழந்ததை கூட உணராமல் இருக்கின்றனர். சமீபத்தில் நடந்த மோசடியில், ஒரு பயனரின் மொபைல் எண் ஹேக் செய்யப்பட்டு, ஒருமுறை கடவுச்சொற்களை (OTPs) மோசடி செய்பவர்கள் கண்டறிந்து அதன் மூலம் ரூ.4 லட்சம் வரை சுருட்டி உள்ளனர். இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் அளித்த தகவல்படி, மோசடி செய்பவர்கள் போலியான eSIM ஆக்டிவேஷன் அழைப்புகள் மற்றும் ஃபிஷிங் மெசேஜ்கள் மூலம் அனைத்து வயதினரையும் குறிவைத்து மோசடி செய்து வருகின்றனர்.
eSIM மோசடி எப்படி நடக்கிறது?
முதலில், உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து வருவதுபோல போலி அழைப்பு அல்லது எஸ்.எம்.எஸ். வரும். பிறகு, உங்கள் eSIM-ஐ ஆக்டிவேட் செய்ய ஒரு போலி லிங்க் அனுப்புவார்கள். நீங்கள் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன், உங்கள் பிசிக்கல் சிம் கார்டு தானாகவே செயலிழந்துவிடும். உங்கள் போனில் நெட்வொர்க் இருக்காது. அதே நொடியில், உங்கள் மொபைல் எண் மோசடி செய்பவர்களின் போனுக்கு மாற்றப்பட்டுவிடும். இனி உங்கள் நம்பருக்கு வரும் அனைத்து அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் OTP-கள் அனைத்தும் நேரடியாக மோசடி செய்பவர்களுக்குப் போய்விடும்.
இப்படி ஓடிபிகளை கையில் வைத்துக்கொண்டு, அவர்கள் உங்கள் வங்கிக் கணக்கின் கடவுச்சொற்களை மாற்றுவது, யுபிஐ பேமெண்ட் செய்வது, மற்றும் பணத்தை திருடுவது போன்ற வேலைகளை சுலபமாக முடித்துவிடுவார்கள். இந்த மோசடிக்கு ஏ.டி.எம். கார்டோ அல்லது நெட் பேங்கிங் விவரங்களோ தேவையில்லை.
நார்மல் சிம் பாதுகாப்பானதா?
சிம் மாற்றுதல் மோசடிகள் பல வருடங்களாக நடந்து வருகின்றன. ஆனால், பிசிக்கல் சிம் மோசடிகளில், மோசடி செய்பவர்கள் நேரடியாக கடைக்குச் சென்று ஊழியர்களை ஏமாற்ற வேண்டும். இது மெதுவான செயல்முறை. ஆனால், eSIM மோசடி தொலைதூரத்தில் இருந்தே சில நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. எனவே, பயனர்கள் உஷாராக இல்லாவிட்டால், விரைவாக பணத்தை இழக்க நேரிடும்.
உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
I4C போன்ற அமைப்புகள் இந்த மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க சில வழிகளைச் சொல்கின்றன. SIM அப்கிரேட் அல்லது eSIM ஆக்டிவேஷன் பற்றி ஏதாவது மெசேஜ் அல்லது இ-மெயில் வந்தால், அதில் உள்ள லிங்கை கிளிக் செய்யாதீர்கள். அதற்குப் பதிலாக, உங்கள் சேவை வழங்குநரை நேரடியாகத் தொடர்பு கொண்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் போனில் திடீரென நெட்வொர்க் துண்டிக்கப்பட்டால், தாமதிக்காமல் உங்கள் சேவை வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள். தெரியாத அழைப்புகளுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் கொடுக்க வேண்டாம். ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மோசடியில் இருந்து உங்களையும், உங்கள் பணத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.