ISRO Leader Shivan Tenure Tamil News : இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்திருக்கிறது மத்திய அரசு. வரும் ஜனவரி 14-ம் தேதியுடன் சிவனின் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், 2022 -ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கே. சிவன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராகவும், இந்திய விண்வெளித் துறையின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது, குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளத்தை அமைத்து வருவது, சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. என்ற புதிய வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணிகள் ஆகியவை சிவன் ஆலோசனையில் நடைபெற்று வருகின்றன. மேலும், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்தும் பணியிலும் கே.சிவன் தலைமையிலான குழு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
Extension of Tenure of ISRO Leader K Shivan
மேலும், சிவன் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற பிறகுதான் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் வேகம் பெற்றன. நிலம் கையகப்படுத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது. தற்போது அவரது பதவி காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டு இருப்பதால் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் தளம் அமைக்கும் பணிகள் இன்னும் வேகம் பெறும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதிக எண்ணிக்கையிலான செயற்கைகோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பியது முதல் செயற்கைக்கோள்களைப் புவி வட்டப்பாதையில் ராக்கெட்டுகள் நிலைநிறுத்துவதை பூமியில் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நேரலையாகப் பார்க்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது வரை விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த கே.சிவனுக்கு சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்தான் சிவனின் பதவிக்காலம் வருகிற ஜனவரி 14-ம் தேதியோடு நிறைவடைகிறது. விண்வெளித்துறையில் ஏராளமான பணிகள் பாதியில் இருப்பதனால், அவருடைய பதவிக்காலம் 2022-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.33 ஆண்டுகளாக செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் பணிகளில் சிவனின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"