/indian-express-tamil/media/media_files/2025/10/05/facebook-and-instagram-to-get-paid-ad-free-2025-10-05-16-13-21.jpg)
விளம்பரமில்லாத ஃபேஸ்புக், இன்ஸ்டா வேண்டுமா? இனிமேல் காசு கொடுக்கணுமாம்!
சமூக ஊடக உலகில் பெரிய மாற்றம் வரப்போகிறது! ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களை விளம்பரங்கள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்றால், இங்கிலாந்தில் விரைவில் நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். மெட்டா நிறுவனம், இங்கிலாந்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா கட்டணப் பதிப்புகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இனிமேல் விளம்பரம் இல்லாமல் உலாவ, பயனர்களுக்கு வழி கிடைத்துவிட்டது.
வரும் வாரங்களில், 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்கள் இணையப் பதிப்பிற்கு (Web) மாதம் £2.99 (சுமார் ரூ.312) செலுத்தியும், ஐ.ஓ.எஸ் (iOS) அல்லது ஆண்ட்ராய்டு (Android) ஆஃப் பயன்படுத்தினால் மாதம் £3.99 (சுமார் ரூ.417) செலுத்தியும் விளம்பரம் இல்லாத சேவையை பெறமுடியும். மொபைல் ஆஃப் பயனர்களுக்கான கூடுதல் கட்டணம், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்கள் ஆஃப் ஸ்டோர்கள் மூலம் செய்யப்படும் வாங்குதல்களுக்கு விதிக்கும் கட்டணங்களைச் (App Store Charges) சார்ந்தது.
மெட்டாவின் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 97% விளம்பரங்கள் மூலம்தான் வருகிறது. ஒருபுறம் விளம்பர வருவாயை தக்கவைத்து கொள்ள வேண்டும்; இன்னொருபுறம் பயனர்களின் தனிப்பட்ட தரவு பாதுகாப்பை (Privacy) உறுதிப்படுத்த வேண்டும். இந்த இருதலை கொள்ளி நிலையில் இருந்து தப்பிக்கவே மெட்டா இந்தக் கட்டண முறையை அறிமுகப்படுத்துகிறது. ஆனால் பயப்பட வேண்டாம். பணம் செலுத்த விரும்பாதவர்கள், வழக்கம்போல் விளம்பரங்களுடன் இலவசமாகவே தொடர்ந்து ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தலாம். இந்த சந்தா வசதி ஆரம்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், வரும் வாரங்களில் இதுகுறித்த அறிவிப்பு அவர்களுக்குச் செல்லும் என்றும் மெட்டா உறுதிப்படுத்தியுள்ளது.
விளம்பரம் இல்லாத கட்டண முறை என்பது மெட்டாவிற்குப் புதியதல்ல. கடந்த ஆண்டு இதேபோன்ற திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) அறிமுகப்படுத்தியபோது, அது கடுமையான சிக்கலில் முடிந்தது. அந்தத் திட்டம் டிஜிட்டல் போட்டிச் சட்டங்களை மீறுவதாகவும், பயனர்களுக்குச் சரியான தேர்வு வழங்கப்படவில்லை என்றும் கூறி, மெட்டாவிற்கு பல மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால், இங்கிலாந்தில் நிலைமை வேறு. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு, இங்கிலாந்து டிஜிட்டல் தனியுரிமைச் சட்டங்களில் அதிக சுதந்திரம் பெற்றுள்ளது. மெட்டா, இங்கிலாந்து தனியுரிமை அமைப்பான ICO-வுடன் (Information Commissioner’s Office) விவாதித்துவிட்டு இந்த திட்டத்தை வெளியிடுகிறது.
"விளம்பரங்களைக் காட்டாமல் சேவைகளைப் பயன்படுத்தும் இந்த புதிய முறை இங்கிலாந்துச் சட்டத்திற்கு முரணாக இல்லை" என்று ICO-வும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் கட்டுப்பாடுகள் சட்டத் தேவையை மீறுவதாக உள்ளது என்று மெட்டா கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் இந்தத் திட்டம் வெற்றிபெற்றால், மற்ற நாடுகளிலும் இதேபோன்ற கட்டண விருப்பங்களை மெட்டா அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.