முகநூல் நிறுவனம், தொடர்பு எல்லைக்கு அப்பால் வாழும் பில்லியன் மக்களுக்கு தங்கு தடையற்ற இணைய சேவையினை வழங்க விரும்பியது.
இதற்காக தொடர்ந்து இரண்டு முறை திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி, பாதியிலேயே கைவிட்டது அனைவருக்கும் தெரியும்.
அகொய்லா மற்றும் டெத்தர் டென்னா என இரண்டு புரோஜெக்டுகளையும் கைவிட்டுவிட்டதாக இந்த வருடம் அறிவித்தது முகநூல். இவ்விரண்டு திட்டங்களும் போதிய இணைய வசதிகளை பெற இயலாத இடங்களில் இருக்கும் மக்களுக்கு இணைய சேவையினை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.
இவ்விரண்டு திட்டங்களும் கைவிடப்பட்ட நிலையில், தன்னுடைய கனவு திட்டமான, இணைய தளத்திற்கென உருவாக்கப்படும் செயற்கை கோள் பற்றி தெரிவித்திருக்கிறது முகநூல்.
அதென்னா என்று பெயரிடப்பட்டிருக்கும் அத்திட்டத்தினைப் பற்றி இதுவரை முழுத் தகவல் எதையும் வெளிவிடவில்லை முகநூல்.
இது போலவே தனியாக செயற்கை கோள் அனுப்பும் திட்டத்தினை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும், சாஃப்ட் பேங்க்கின் ஒன் வெப் நிறுவனமும் நிலுவையில் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இணைய வசதி இல்லாத இடங்களிலும் கூட இணைய சேவையினை உருவாக்கி, அம்மக்களை உலகத்தோடு இணைக்கவேண்டும் என்பது என் கனவு என முகநூல் நிறுவர் மார்க் அடிக்கடி கூறுவது வழக்கம்.
அகொய்லா மற்றும் டெத்தர் டென்னா போன்று இத்திட்டமும் கிடப்பில் போடப்படாமல் இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.