தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது முகப்பு கண்ணாடியின் உள்பக்கத்தில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். அப்படி ஒட்டாத வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும்போது அந்த வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் முகப்பு கண்ணாடியில், வேண்டுமென்றே ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்கள் ஒட்டாமல் இருப்பதை தடுக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பல வாகன ஓட்டிகள் காருக்குள் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை வைத்துக் கொண்டு சுங்கச் சாவடியை கடக்கும் போது மட்டும் அதை கையில் எடுத்து முன்பக்க கண்ணாடியில் ஒட்டுகின்றனர். இதனால் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இதனை தடுக்கவே இந்த நடவடிக்கை.
அதன்படி, முகப்பு கண்ணாடியின் உள்பக்கத்தில் ஃபாஸ்டேக் வில்லை ஒட்டாத வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும்போது அந்த வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 45,000 கி.மீ. தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1000 சுங்கச்சாவடிகளில், ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதி ஏற்கனவே உள்ள நிலையில் ஆணையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“