மரங்கள் மனிதர்களுக்கு உற்ற நண்பன் என்பது அனைவருக்கும் தெரியும். ஏராளமான நன்மைகளை செய்து வருகிறது. மனிதன் உயிர் வாழ தேவையான ஆக்சிஜனை தாராளமாக வழங்கி வருகிறது. இருப்பினும் மரம், காடு அழிப்பு ஆகியவற்றால் கால நிலை மாறி வருகிறது. கால நிலை மாற்றம் உலகிற்கு பெரும் ஆபத்து என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவற்றை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாகனங்கள் மற்றும் அதில் பயன்படுத்தும் எரிபொருட்கள் முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு மாற்றாக ஃபின்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் மரங்கள் மூலம் பசுமை பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஆம், மரங்களில் இருந்து வாகனங்களுக்கு பேட்டரி தயாரிக்கும் முயற்சி. ஃபின்லாந்து நாட்டை சேர்ந்த சோரா அயன் சோ என்ற நிறுவனம் மரங்களில் இருந்து கிடைக்கும் லிக்னின் என்ற பொருள் மூலம் பசுமை பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. DW Tamil யூடிப் தளத்தில் இது குறித்த செய்தி வெளியிட்டுள்ளது.
தற்காலிக பேட்டரிகளில் புதைப்படிம எரிபொருட்களை பயன்படுத்தி ஆனோட் எனப்படும் பேட்டரியின் நேர்மின்வாய் பகுதி உருவாக்கப்படுகிறது. ஆனால் அதற்கு மாற்றாக மரங்களில் காணப்படும் லிக்னின் என்ற பாலிமரைப் பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். லிக்னின் பயன்பாடு குறித்து பல நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. அதில் ஒன்று தான் ஃபின்லாந்து நாட்டின் முன்னணி காகித உற்பத்தி நிறுவனமான சோரா அயன் சோ. உலகின் மிகப்பெரிய தனியார் வன உரிமையாளர்களில் இவர்களும் ஒன்று.
காகிதமில்லா அலுவலகங்கள் பிரபலமாகி வருகின்றன என்பதால் வேறு வழிகளில் எவ்வாறு வருவாய் ஈட்டலாம் என இந்நிறுவனம் ஆராய்ந்து வந்தது. இதற்காக அந்நிறுவனப் பொறியாளர்கள் புதிய யோசனையை முன்வைத்தனர். அது தான் பசுமை பேட்டரி. காகித கழிவு கூழில் இருந்து லிக்னினை பிரித்தெடுத்து பின்னர் அதனை வைத்து போட்டரிகளுக்கான கார்பன் மூலம் பொருள் தயாரிக்கலாம் என்பதே அந்த யோசனை.
லிக்னின் அடிப்படையிலான நேர்மின்வாய் மூலமாக மின்சார வாகனங்களை வெறும் 8 நிமிடங்களில் சார்ஜ் செய்வதே இதன் முக்கிய குறிக்கோள். 2025-ல் இதன் தயாரிப்பை தொடங்க உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“