Google New Features Tamil News: கூகுள் பிக்ஸல் 5-உடன் ஆண்ட்ராய்ட் 11 வெளியிட்டதைத் தொடர்ந்து, மேலும் பழைய பிக்சல் தொலைபேசிகளுக்கும் புதிய சாஃப்ட்வேர்களை பொருத்தி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது கூகுள். ஆண்ட்ராய்ட் 11 அனுபவத்திற்கு மேலான மேம்பாடுகளைக் கொண்டுவருவதற்கான பணிகளில் ஏற்கெனவே இந்தத் தொழில்நுட்ப நிறுவனம் இறங்கிவிட்டது. வரவிருக்கும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் முறையை முற்றிலும் மாற்றும் என்று சமீபத்தில் புதுப்பித்த வலைப்பதிவில் கூகுள் குறிப்பிட்டிருந்தது. ஆண்ட்ராய்ட் பயனர்களுக்காகக் கூகுள் கொண்டு வரப்போகும் ஐந்து புதிய அம்சங்களை இங்கே பார்ப்போம்.
கூகுள் அசிஸ்டன்ட் வழியாகச் செயலிகளைத் திறக்கலாம்
ஸ்மார்ட் கூகுள் அசிஸ்டன்ட்டில் மேம்பட்ட மாற்றத்தைக் கொண்டுவருகிறது கூகுள். இதன் மூலம் நீங்கள் விரும்பும் எந்தவொரு செயலியையும் உடனடியாகத் திறந்து தேவையான விஷயங்களை எளிமையாகத் தேடலாம். ‘ஹே கூகுள்’ என்று கூறி தேவையானவற்றைக் கேட்பதன் மூலம் இதனை எளிதாகச் செய்யமுடியும்.
கூகுள் டியோவில் ஸ்க்ரீன் ஷேரிங்
கூகுள் டியோவில் வீடியோ அழைப்பில் இருக்கும்போது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் திரையைப் பகிரும் ஆப்ஷன் வரவிருக்கிறது. இந்த அம்சம் ஏற்கெனவே கூகுள் மீட்டில் உள்ளது. மேலும் மீட்டில், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் இதர உள்ளடக்கங்களைப் பகிரும் அம்சமும் இருக்கின்றன. கூடுதலாக, வீடியோ அழைப்பை எடுக்காமல் போயிருந்தால் அவருக்கு வீடியோ மெசேஜ் அனுப்பும் ஆப்ஷனும் இதில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்கும் ஃபோன் ஆப் (Phone App)
ஃபோன் ஆப் இப்போது தானாகவே தேவையற்ற ஸ்பேம் அழைப்புகளை நிறுத்தித் தடுக்க முடியும். மேலும் யார் அழைக்கிறார்கள், ஏன் என்றுகூட உங்களுக்குத் தெரிவிக்கும். ஸ்பேம் பாதுகாப்பின் இந்த அம்சம் ஆண்ட்ராய்ட்9 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுக்கப்பட்ட அனைத்து சாதனங்களிலும் சீராக இயங்கும் என்று கூகுள் கூறுகிறது.
மேம்படுத்தப்பட்ட ஒலி அறிவிப்புகள்
கூகுள் தனது லைவ் டிரான்ஸ்கிரிப்ட் செயலியில் ஒலி-அறிவிப்பு (sound-notification) முறையை மேம்படுத்தியுள்ளது. இது செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் பயனளிக்கும். ஃபயர் அலாரம், கதவு தட்டும் சத்தம் அல்லது உபகரணங்களின் அலறல் உள்ளிட்ட ஒலியை அடையாளம் கண்டு, ஃபிளாஷ், வைப்ரேட் அல்லது புஷ் நோட்டிஃபிகேஷன் மூலம் பயனரை எச்சரிக்கும்.
குரல் பயன்பாடு இல்லாமல் ‘ஆக்ஷன் பிளாக்’ மூலம் தொடர்பு
குறுகிய சொற்றொடர்கள் மற்றும் படங்கள் சித்தரிப்புக்குக் குரலைப் பயன்படுத்தாமல், இனி Action block ஆப்ஷனைப் பயன்படுத்தப்படலாம். அறிவாற்றல், வயது மற்றும் பேச்சு தொடர்பான குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இது ஓர் செயற்கைக் குரலாகச் செயல்படுகிறது. டோபி டைனவொக்ஸின் (Tobii Dynavox) தகவல்தொடர்பான பல ஆயிரம் படங்களையும், தற்போதுள்ள ஸ்பீச் தெரபி சிறப்புக் கல்விப் பொருட்களையும் கூகுள் ஒருங்கிணைத்துள்ளது. மேலும், ஜப்பானிய, இத்தாலியன், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"