2025-ம் ஆண்டில், இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளது. ஆனால் இந்த வானியல் நிகழ்வுகளில் ஒன்று மட்டுமே இந்தியாவில் இருந்து தெரியும் என்று உஜ்ஜயினில் உள்ள ஜிவாஜி ஆய்வகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர் கிரகணங்கள் நிகழும் அடுத்தாண்டில் மார்ச் 14ம் தேதி முழு சந்திர கிரகணத்துடன் தொடங்கும் என்று கண்காணிப்பு மையத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர பிரகாஷ் குப்த் அறிவித்தார். இருப்பினும் இந்த நிகழ்வு இந்தியாவில் தெரியாது.
இந்த சந்திர கிரகணத்தை அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் வடக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல்களில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மார்ச் 29 அன்று, ஒரு பகுதி சூரிய கிரகணம் நிகழும், இதுவும் இந்தியாவில் தெரியாது. இந்த கிரகணம் வட அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் முழுவதும், ஐரோப்பா முழுவதும் மற்றும் வடமேற்கு ரஷ்யாவில் காணப்படும்.
ஆனால் செப்டம்பர் 7 மற்றும் 8-க்கு இடையில் முழு சந்திர கிரகணம் நிகழும். இது இந்தியாவில் தெரியும். இந்த நிகழ்வு ஆசியா, ஐரோப்பா, அண்டார்டிகா, மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியப் பெருங்கடலின் பிற பகுதிகளிலும் காண முடியும்.
2025 ஆம் ஆண்டின் இறுதி கிரகணம் செப்டம்பர் 21 மற்றும் 22-க்கு இடையில் நிகழும். இது ஒரு பகுதி சூரிய கிரகணமாகும், இதுவும் இந்தியாவில் தெரியாது. இந்த கிரகணம் நியூசிலாந்து, கிழக்கு மெலனேசியா, தெற்கு பாலினேசியா மற்றும் மேற்கு அண்டார்டிகாவில் தெரியும்.