2023-24-ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நேற்று (மார்ச் 20) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார். காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றப் பின் தாக்கல் செய்யப்படும் 3-வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் தகவல் மற்றும் பல்வேறு துணை சார்ந்த வாய்ப்புகளை அனைவரும் அணுகும் வகையில் முதல் கட்டமாக 7 நகரங்களில் உள்ள முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் உள்ள முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த இணைய யுகத்தில் தகவல் பரிமாற்றம் அடிப்படை தேவையாக உள்ளது. சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்தை நிறுவ, தகவல் மற்றும் வாய்ப்புகளை அனைவரும் அணுகுவது இன்றியமையாதது. அதன் அடிப்படையில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
மேலும் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் முறையில் எளிதாகவும், வெளிப்படையாகவும் வழங்க 'Simple Gov' என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”