இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்லும் வீரர்கள் பெயரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.27) அறிவித்தார். ககன்யான் திட்டம், முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமாகும். இது முதல் குழு இந்திய விண்வெளி பயணமாகும் (crewed Indian space mission). கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தை பார்வையிட்ட பின் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் (குரூப் கேப்டன்), அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் சுபன்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய விமானப் படையில் (IAF) விங் கமாண்டர்கள் அல்லது குரூப் கேப்டன்களாக பணிபுரிந்தவர்கள் என்றும் சோதனை விமானிகளாக பணிபுரிந்த விரிவான அனுபவம் கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான்கு விண்வெளி வீரர்களும் பெங்களூருவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். விண்வெளி வீரர்களின் தேர்வு இந்திய விமானப் படையின் ஏரோஸ்பேஸ் மெடிசின் நிறுவனத்தில் நடந்தது.
இஸ்ரோ மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனம் Roscosmos-ன் துணை நிறுவனமான Glavkosmos இணைந்து 2019-ல் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, இந்த 4 விண்வெளி வீரர்கள் ரஷ்யாவின் யூரி ககாரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பிப்ரவரி 2020-ல் முதல் மார்ச் 2021 வரை பயிற்சி பெற்றனர்.
ககன்யான் திட்டத்தில் வீரர்கள் பூமியின் குறைந்த சுற்றுப் பாதைக்கு பயணிப்பர். பூமியிலிருந்து விண்வெளியில் 400 கி.மீ தூரம் பயணித்து 3 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொள்வர். இது இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திறனை நிரூபிக்கும் பயணமாகும். ஆய்வுக்குப் பின் வீரர்களை மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“