மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை பயணம் இன்று (அக்டோபர் 21) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இன்று 3 முறை சோதனை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இறுதியாக காலை 10 மணியளவில் மாதிரி விண்கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படுவதற்கான க்ரூ எஸ்கேப் சிஸ்டத்திற்கான சோதனை இன்று நடைபெற்றது. டிவி-டி1 என்ற ராக்கெட் மூலம் தரையில் இருந்து 17 கிலோ மீட்டம் தூரம் விண்கலம் அனுப்பபட்டு பின்னர் மீண்டும் தரையிறக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.
சரியாக 16.6 கி.மீ தூரத்தில் ஏவப்பட்ட 9-வது நிமிடத்தில் விண்கலத்தில் வீரர்கள் இருப்பது போன்று உருவாக்கப்பட்ட தொகுதி ராக்கெட்டில் இருந்து பிரிந்து பாராசூட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள வங்கக்கடலில் இறக்கப்பட்டது. இதையடுத்து பிரத்யேக கப்பல் மற்றும் கடற்படையின் டைவிங் குழுவினர் விண்கலனை மீட்டனர்.
சோதனைக்குப் பின் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், டிவி-டி1 சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது. க்ரூ எஸ்கேப் சிஸ்டம் மேக் எண் (1.2 மாக்) தூரம் வரை கொண்டு செல்லப்பட்டது. சோதனை வெற்றி பெற்றதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
முன்னதாக இன்று காலை 8 மணிக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் வானிலை காரணமாக 8.30 மற்றும் 8.45 மணி என நேரம் மாற்றப்பட்டது. பின்னர் 8.45 மணிக்கு மணிக்கு ராக்கெட் புறப்படத் தயாராக இருந்த நிலையில் எஞ்சின் கோளாறு காரணமாக பணி நிறுத்தப்பட்டது. இருப்பினும், விஞ்ஞானிகள் பிரச்சனையை விரைவாகக் கண்டறிந்து சரிசெய்து, காலை 10 மணிக்கு டிவி-டி1 சோதனைக்காக உருவாக்கப்பட்ட ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“