/indian-express-tamil/media/media_files/2025/10/06/logitech-solar-keyboard-2025-10-06-21-45-17.jpg)
சார்ஜ் தேவையில்ல, 4 மாத பேட்டரி பேக்கப்... ஒளியின் சக்தியில் இயங்கும் வயர்லெஸ் கீபோர்டு அறிமுகம்!
மின்சாரம் இல்லை, சார்ஜ் இல்லை. இனிமேல் நீங்க கீபோர்டுக்கு சார்ஜர் தேட வேண்டிய அவசியமே இல்லை. லாஜிடெக் நிறுவனம், ஒளியை மட்டுமே சக்தியாகப் பயன்படுத்தும் அதிநவீன வயர்லெஸ் கீபோர்டை (சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 என்ற பெயரில்) அறிமுகப்படுத்தி உள்ளது. இது சாதாரணக் கீபோர்டு அல்ல. இதில் லாஜிடெக்கின் சிறப்பான "லாஜி லைட்-சார்ஜ்" தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தக் கீபோர்டை நீங்க சூரிய ஒளி மட்டுமல்லாமல், செயற்கை ஒளியில் இருந்தும் கூட ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும்.
முழுமையாக ஒருமுறை சார்ஜ் செய்யப்பட்டால், இந்தக் கீபோர்டை நீங்க தொடர்ந்து 4 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். மிக முக்கியமாக, இதில் உள்ள ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி பேட்டரியை மாற்றும் அல்லது சார்ஜ் செய்யும் தேவையை இந்தக் கீபோர்டு முற்றிலுமாக நீக்குகிறது.
லாஜிடெக் K980, வழக்கமான முழு அளவிலான (Full-sized) அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் சிசர்-ஸ்விட்ச் கீகள் (Scissor-switch keys) ஒரு மடிக் கணினியில் (Laptop) டைப் செய்யும் உணர்வை வழங்கும். பல சாதனங்களுடன் வேலை செய்பவர்களுக்காக, இந்த கீபோர்டில் ஈஸி-சுவிட்ச் கீ வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே கீபோர்டை நீங்கள் மூன்று வெவ்வேறு சாதனங்களுக்கு மத்தியில் உடனடியாக மாற்றிப் பயன்படுத்த முடியும்.
வணிகப் பயன்பாட்டிற்காக, லாஜிடெக் நிறுவனம் இந்தக் கீபோர்டின் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 வணிக மயமாக்கப்பட்ட (Commercial) வெர்ஷனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வெர்ஷன் பாதுகாப்பான இணைப்புக்காக லாஜி போல்ட் (Logi Bolt) USB-C ரிசீவருடன் வருகிறது. இதில் கூடுதல் வசதியாக, 23 ஷார்ட்கட்களை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் (Customize) செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் தற்போது சர்வதேச சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. யுனிவர்சல் (Universal) மற்றும் மேகோஸ் (macOS) மாடல்களின் விலை, $99.99 (சுமார் ரூ.8,300), வணிக மயமாக்கப்பட்ட வெர்ஷன் விலை $109.99 (சுமார் ரூ.9,100). சூரிய ஒளியில் இயங்கும் இந்தச் சூழல் தொழில்நுட்பம், வயர்லெஸ் கீபோர்டு சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.