இன்றைய உலகின் சட்டைப்பையில் அடங்கும் ஸ்மார்ட்போன்களையும், எடை குறைவான லேப்டாப்களையும் காணும்போது, 1980-களின் ஆரம்பத்தில் தொழில்நுட்ப உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கணினி பற்றி பேசுவது சற்று வினோதமாகத் தோன்றலாம். ஆனால், 1981-ம் ஆண்டு வெளியாகி, portable கணினி என்ற கருத்தாக்கத்திற்கு புதிய அர்த்தத்தை அளித்த, ஆஸ்பர்ன் 1 பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
ஒரு சிறிய தையல் இயந்திரத்தின் வடிவத்தில், சுமார் 10.7 கிலோகிராம் எடையுடன், ஒரு சூட்கேஸ் போல காட்சியளித்த ஆஸ்பர்ன் 1, அன்றைய தொழில்நுட்ப உலகின் பிரம்மாண்டமான பாய்ச்சலாக இருந்தது. இன்று நாம் லேப்டாப்களை "போர்ட்டபிள்" என்று அழைப்பது போல, ஆஸ்பர்ன் 1ஐ luggage-able என்று அழைத்தாலும், இதுவே நவீன லேப்டாப்களின் முன்னோடி என்பதில் சந்தேகமில்லை.
1981-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி, ஆஸ்பர்ன் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன், அதன் நிறுவனர் ஆடம் ஆஸ்பர்ன் தலைமையில், இந்த கணினியை வெளியிட்டது. இதன் விலை 1,795 அமெரிக்க டாலர்கள். இன்றைய பண மதிப்பில் இது சுமார் $6200 ஆக இருந்தாலும், இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், WordStar, SuperCalc போன்ற பிரபலமான மென்பொருட்கள், இதன் விலையிலேயே (சுமார் $1,500 மதிப்புள்ளவை) இணைத்து வழங்கப்பட்டன. இதுவே ஆஸ்பர்ன் 1-ஐ சந்தையில் கவர்ச்சிகரமான தேர்வாக மாற்றியது. மென்பொருட்களுக்காக தனித்தனியாக செலவழிக்காமல், கணினியுடன் அவை அனைத்தும் கிடைப்பது புதிய அணுகுமுறையாக இருந்தது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/30/osborne-1-2025-06-30-13-17-35.jpg)
ஆஸ்பர்ன் 1ன் பிரம்மாண்டமான எளிமை:
10.7 கிலோகிராம், இதை தூக்கிச் செல்வதே ஒரு சாகசமாக இருந்தது. Zilog Z80 @ 4 MHz இப்போதைய மைக்ரோ விநாடிகளுடன் ஒப்பிட்டால் ஆமை வேகம்தான். 64 KB, இன்றைய ஸ்மார்ட்போன்களில் உள்ள ரேமின் சிறு துளிகூட இல்லை. இரண்டு 5¼-இன்ச் ஃபிளாப்பி டிஸ்க் டிரைவ்கள் - இதில்தான் பைல்ஸ் மற்றும் தரவுகள் சேமிக்கப்பட்டன. உள்ளமைக்கப்பட்ட 5-இன்ச் கருப்பு வெள்ளை CRT டிஸ்ப்ளே - மிகச் சிறியது, ஒரே நேரத்தில் 52 எழுத்துகள், 24 வரிகளை மட்டுமே காட்டும். ஒரு புத்தகம் படிப்பதற்கு சிரமம், ஆனால் அன்றைக்கு இதுவே பெரிய விஷயம். CP/M 2.2 - DOS வருவதற்கு முன்பு பிரபலமாக இருந்த இயக்க முறைமையாகும்.
ஆஸ்பர்ன் 1 வெறும் கணினி மட்டுமல்ல, இது புதிய வாழ்க்கை முறையின் தொடக்கத்தைக் குறித்தது. அலுவலகத்திலிருந்து கணினியை வீட்டிற்கு எடுத்துச் சென்று வேலை செய்யும், அல்லது பயணங்களின் போது கூட வேலை செய்யும் என்ற கருத்தை பரப்பியது. இது தனிப்பட்ட கணினிகள் (Personal Computers) மக்களை சென்றடைவதிலும், அவர்களின் தினசரி வாழ்வில் பகுதியாவதிலும் முக்கிய பங்கை வகித்தது.
ஆஸ்பர்ன் 1 பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றாலும், ஆஸ்பர்ன் நிறுவனம் துரதிர்ஷ்டவசமான "ஆஸ்பர்ன் எஃபெக்ட்" என்ற நிகழ்வுக்கு பலியானது. நிறுவனம் தங்கள் அடுத்த மேம்படுத்தப்பட்ட மாடலை (Osborne Executive) சந்தைக்கு வருவதற்கு முன்பே அறிவித்தது. இதனால், வாடிக்கையாளர்கள் புதிய மாடலுக்காக காத்திருக்கத் தொடங்கி, Osborne 1-ன் விற்பனை திடீரென வீழ்ச்சியடைந்தது. 1983 ஆம் ஆண்டில், நிறுவனம் திவாலானது. வெற்றியின் உச்சத்தில் இருந்து வீழ்ச்சி, தொழில்நுட்ப உலகில் முக்கியமான பாடமாக இன்றும் பேசப்படுகிறது.
ஆஸ்பர்ன் 1 கணினியாக மட்டுமன்றி, கனவின் பிரதிபலிப்பாகவும் இருந்தது. கம்ப்யூட்டர்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆடம் ஆஸ்பர்னின் கனவு, இந்த "கையடக்க" இயந்திரத்தின் மூலம்தான் முதன்முதலில் பெரிய அளவில் நிறைவேறத் தொடங்கியது. இன்றைய மெல்லிய, சக்திவாய்ந்த லேப்டாப்களின் அஸ்திவாரத்தை அமைத்த வரலாற்று சிறப்புமிக்க சாதனமாக ஆஸ்பர்ன் 1 என்றும் நினைவு கூரப்படும் என்பதில் சந்தேகமில்லை.