இன்றைய சூழலில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களையே பார்க்க முடிவதில்லை. ஸ்மார்ட்போனின் பயன்பாடு அந்த அளவிற்கு அதிகரித்துள்ளது. குழந்தைகள் கூட தற்போது வெகு சாதாரணமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். எனினும், ஃபீச்சர் போன்களின் விற்பனையும் கணிசமான அளவு நடந்து கொண்டு தான் இருக்கிறது.
வசதி வாய்ப்பு இல்லாத சாமானியர்கள் மட்டும் தான் ஃபீச்சர் போன்கள் வைத்திருப்பார்கள் என்ற நிலை இல்லாமல், தங்கள் தேவை அறிந்து ஃபீச்சர் போன்கள் வைத்திருப்பவர்கள் தற்போது ஏராளம். அந்த வகையில் ஃபீச்சர் போன்களிலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொடுக்கப்படுகின்றன. அதன்படி, ஹெச்.எம்.டி நிறுவனம் தரப்பில் இருந்து களமிறங்கி இருக்கும் ஹெச்.எம்.டி150 மியூசிக் (HMD 150 Music) மற்றும் ஹெச்.எம்.டி130 மியூசிக் ஆகிய இரண்டு போன்களின் செயல்பாடு குறித்து இந்தக் குறிப்பில் காணலாம்.
ஹெச்.எம்.டி150 மியூசிக் (HMD 150 Music): இந்த மாடல் போனில் கியூவிஜிஏ (QVGA) தரத்திலான 2.4 இன்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எல்.இ.டி ஃபிளாஷ் மற்றும் பின்புற கேமராவும் இருக்கிறது. 8 எம்.பி ரேம் மற்றும் 8 எம்.பி ஸ்டோரேஜ் இருக்கும் இந்த போனில், 32 ஜி.பி வரையில் மைக்ரோஎஸ்டி கார்டு (MicroSD card) பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இது மட்டுமின்றி 2500 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி இதில் இருக்கிறது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும் வகையில் வடிவமைத்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது. கூடுதலாக டைப் சி சார்ஜிங் வசதியும் இருக்கிறது. 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக், 2W ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் 5.0 அனைத்தும் இதன் கூடுதல் அம்சங்கள். பர்பிள், லைட் ப்ளூ மற்றும் டார்க் கிரே ஆகிய நிறங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ. 2,399-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹெச்.எம்.டி130 மியூசிக் (HMD 130 Music): இந்த மாடலிலும் கியூவிஜிஏ (QVGA) தரத்திலான 2.4 இன்ச் திரை உள்ளது. டூயல் எல்.இ.டி ஃபிளாஷ், 2500 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரியுடன் 30 நாட்கள் பேக்கப் இதிலும் இருக்கிறது. இவை மட்டுமின்றி டைப் சி சார்ஜிங், 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக், 2W ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் 5.0 ஆகிய அனைத்தும் இந்த போனிலும் இடம்பெற்றுள்ளன. 32 ஜி.பி வரை ஸ்டோரேஜ் கொண்ட மைக்ரோஎஸ்டி கார்டை இந்த போனில் உபயோகப்படுத்த முடியும். ரூ. 1,899 என இந்த போனின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெச்.எம்.டி தளத்தில் இருந்து இந்த இரண்டு மாடல் போன்களையும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.