/indian-express-tamil/media/media_files/2025/10/16/first-robot-phone-by-honor-2025-10-16-12-07-13.jpg)
சென்சார், உணர்ச்சியுடனும் பேசும் போன் வந்துவிட்டது... ஹானரின் 'ரோபோட் போன்' அறிமுகம்!
புதிய தலைமுறை ஸ்மார்ட்போன்களை எதிர்பார்த்திருந்த தொழில்நுட்ப உலகில், ஹானர் நிறுவனம் முற்றிலும் எதிர்பாராத ஒரு சாதனத்தை அறிமுகப்படுத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன் மேஜிக்8 ப்ரோ வெளியீட்டு நிகழ்வின் முடிவில், ஹானர் நிறுவனம் புதிய வகைத் தொழில் நுட்பத்தைக் காட்சிப்படுத்தியுள்ளது. அதுதான்... "ரோபோட் போன்" (Robot Phone)! இது வெறும் மேம்படுத்தப்பட்ட ஒரு மாடல் அல்ல; செயற்கை நுண்ணறிவு (AI), ரோபாட்டிக்ஸ் மற்றும் மொபைல் வடிவமைப்பு ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து, இது ஒரு "புதிய வகை உயிரினம்" என்று ஹானர் தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட டீசர் வீடியோ, நம்மை அறிவியல் புனைகதைத் திரைப்பட உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த ரோபோட் போன், பிரபல Wall-E மற்றும் BB-8 ரோபோக்களின் கலவையாகத் தோற்றமளிக்கிறது. இதன் முக்கிய ஈர்ப்பு கேமரா. இந்தச் சாதனத்தின் பின்பகுதியில் இருந்து ஒரு ஜிம்பல் (Gimbal) பொருத்தப்பட்ட மோட்டார் கை வெளியே வருகிறது. இது ஒரு ரோபோவின் தலை போலச் சுழலக்கூடியது. இந்தக் கேமரா கணம் தவறாமல் கிட்டத்தட்ட எல்லாக் கோணங்களிலிருந்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
போனை கவிழ்த்து வைத்தாலும், கேமரா கை வெளியே வந்து, அதைச் சுற்றியுள்ளவற்றைப் பார்ப்பது போல் சுழன்று பார்க்கும். அதாவது, அது சுற்றுப்புறத்தைப் பற்றி "அறிந்து" கொள்கிறது என்ற உணர்வை நமக்குத் தருகிறது. சுவாரசியம் என்னவென்றால், இது வெறும் இயந்திரம் அல்ல. இது "வீஈஈ, ஓ, கூ" போன்ற ஒலிகளை எழுப்பி, ஸ்டார் வார்ஸ்-ன் R2-D2 மற்றும் Grogu (BabyYoda) போல செயல்பட்டு நம்மிடம் 'கெஞ்சுகிறது' அல்லது 'சிரிக்கிறது'.
ஹானர் இந்த சாதனத்தை வெறும் கருவி என்று மட்டும் சொல்லாமல், ஒரு "உணர்ச்சிப்பூர்வமான துணையாளியாக" விவரிக்கிறது. இது ரோபோ போல தானாகவே உணரும் (Senses). பயனருக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் (Adapts).தொடர்ந்து வளர்ச்சியடையும் (Evolves). பயனர்களுக்கு அன்பு, மகிழ்ச்சி, மற்றும் ஞானத்தை அளித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.
ஏ.ஐ. உடன் குரல் வழியாகப் பேசுவதற்கு மக்கள் இன்னும் தயக்கம் காட்டுகிறார்கள். எனவே, போனுக்கு தனித்துவமான ஆளுமையையும், வெளிப்படையான வடிவத்தையும் கொடுப்பதன் மூலம், ஏ.ஐ. அசிஸ்டெண்ட் மேலும் நெருக்கமானதாகவும், பேச வசதியானதாகவும் மாற்ற ஹானர் திட்டமிடுகிறது.
இந்த ரோபோட் போன் வெறும் கேமராவின் மேம்படுத்தல் அல்ல. இது ஹானரின் "ஆல்ஃபா திட்டம்" (Alpha Plan) என்ற எதிர்கால இலக்கின் பகுதியாகும். இந்தச் சாதனம், "ஏ.ஐ-ஆல் இயங்கும் பல-மாதிரி நுண்ணறிவு, ரோபோடிக் செயல்பாடு மற்றும் மேம்பட்ட இமேஜிங் திறன்கள்" ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மனித-இயந்திர தொடர்பை மறுவரையறை செய்யும் என்று ஹானர் உறுதியளிக்கிறது. தற்போதைக்கு இது CGI வீடியோவில் உள்ள கருத்துரு மட்டுமே. அதன் உண்மையான உடல் அமைப்பு அல்லது தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்வில் இந்த ரோபோட் போன் குறித்த கூடுதல் தகவல்களையும், அதன் உண்மையான முன்மாதிரியையும் (Prototype) ஹானர் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் நம் ஸ்மார்ட்போன்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும் மற்றும் உணர்ச்சியைக் காட்டும் என்றால், அது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்க!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.