சென்னையில் மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 'சிங்கார சென்னை' கார்டு பயன்படுத்தி பொதுமக்கள் பயணிக்கலாம். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இந்த வசதியை இன்று அறிமுகம் செய்தார்.
மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் ‘சிங்கார சென்னை’ பயண அட்டையின் சிறப்புகள் குறித்து கூறினார். பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ‘சிங்கார சென்னை’ பயண அட்டை திட்டத்தை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் வகையிலான இந்த அட்டையின் மூலம் இனி மாநகரப் பேருந்துகளிலும் டிக்கெட் கட்டணத்தை செலுத்திக்கொள்ள முடியும். சென்னையில் 99.9% பேருந்துகளில் எலக்ட்ரானிக் டிக்கெட் வழங்கப்படுகிறது.
டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். யு.பி.ஐ, கார்டு மூலம் பேமெண்ட் பெறும் வகையில் வசதிகள் அறிமுகம் செய்ய முயற்சிகள் எடுக்கப்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து இப்போது ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்துள்ளோம். முதற்கட்டமாக 50,000 கார்டுகள் வழங்கப்படும். கார்டு வாங்கி மொபைல் எண் தெரிவித்து ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
குறைந்த பட்சமாக ரூ.100க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த தொகைக்கு ஏற்ப மெட்ரோ, பேருந்துகளில் பயணம் செய்யலாம். இதன் மூலம் எளிதாகவும், சீக்கிரமாகவும் பயணம் செய்யலாம். நடந்துநர்களுக்கு சில்லறை பாக்கி பிரச்சனை ஏற்படாது. 20 மாநகர பேருந்து நிலையங்களில் கார்டு வழங்கப்படுகிறது.
மெட்ரோ கார்டு வைத்திருப்பவர்கள் புதிய கார்டு வாங்கத் தேவையில்லை. அதே அட்டையில் ரீசார்ஜ் செய்து பேருந்திலும் பயணிக்கலாம். இந்த கார்டை சென்னையில் மட்டுமல்ல என்.சி.எம்.சி ப்ரோடோக்கால் உள்ள மற்ற மாநில மெட்ரோவிலும் பயன்படுத்தலாம் என்றார்.