டோக்கியோவில் இருந்து நந்தகோபால் ராஜன்
உபர் ஏர் : மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க ஜன நெரிசலுடன் நாம் தினமும் நிறைய நேரம் ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கிறோம்.
மும்பை விமான நிலையத்தில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை அடைய நமக்கு எவ்வளவு நேரம் ஆகிறது? குர்கானில் இருந்து மத்திய டெல்லியினை அடைய எவ்வளவு நேரம் ஆகிறது? நிச்சயமாக பத்து நிமிடத்திற்குள் இல்லை.
ஆனால் ‘உபர் ஏர்’ என்ற திட்டம் உங்களின் பயண நேரத்தினை எளிமைப்படுத்த வருகிறது. பத்து நிமிடத்தில் மும்பை விமான நிலையத்தில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தையும், குர்கானில் இருந்து மத்திய டெல்லியையும் அடைந்து விடலாம்.
உபரின் புதிய திட்டம் : உபர் ஏர்
ஜப்பான், ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தியாவில் உபர் ஏர் (Uber Air) என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளது அந்நிறுவனம். உபர் எலவேட் ஆசியா – பசிபிக் மாநாட்டில் உபரின் விமான சேவைகளுக்கான தலைவர் எரிக் ஏலிசன் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
உபர் எலவேட் என்ற திட்டம் 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மக்கள் தொகை மிகவும் அதிக உள்ள இடங்களில் மிகவும் குறைந்த நேரத்தை மக்கள் பயணத்திற்காக செலவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கப்பட்டது இத்திட்டம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்த ஐந்து நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டத்தால் தொழில்நுட்ப ரீதியாக நாம் மற்றொரு மைல் கல்லினை எட்டமுடியும் என்றும் அவர் கூறினார்.
உபர் எலவேட் என்ற திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமான சேவைகளுக்கான மார்க்கங்களும் அந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மும்பை, டெல்லி ஆகிய இடங்களிலும், டோக்கியோ, சியோல், சிட்னி, தைப்பை ஆகிய இடங்களிலும் இந்த சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. டெல்லி வாழ் மக்கள் இந்த சேவைகளின் மூலமாக நாளொன்றுக்கு 2 மணி நேரத்தினை சேமிக்கலாம்.

உபர் ஏர் ( Uber Air ) வேகம் என்ன தெரியுமா?
உபர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பார்னே ஹார்ஃபோர்ட் தெரிவிக்கையில், இனி கார்கள் தான் உபரின் அடையாளம் என்று நாம் ஒரு போதும் நினைத்துவிடக் கூடாது. வானத்தில் இருக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்வோம் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விமான சேவையின் மூலம் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க இயலும். முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கும் இந்த விமானத்தின் சேவைகளை 15 கி.மீ தொடங்கி 100 கி.மீ வரையிலான பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
1000 முதல் 2000 அடி உயரத்தில் பறக்க இருக்கும் இந்த உபர் ஏர் விமானத்திற்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 மைல்கள் தூரத்தை கடக்க இயலும். ஒரு காருக்கான விலையை விட இது மிகவும் குறைவுதான். இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் உபர், உபர் ஈட்ஸ் போன்ற இதர சேவைகளுக்கும் இந்த உபர் ஏரியல் டேக்ஸி பயன்படும் என்று அவர் கூறினார்.

பரிசோதனை முயற்சிகள்
உபர் ஹெலிகாப்டர் வாயிலாக இந்த சோதனை ஓட்டங்களை வெற்றிகரமாக நடத்திவிட்டோம். அதன் பின்னரே மற்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்திற்கான செயல் வடிவம் தருகிறோம் என்று எரிக் ஏலிசன் கூறினார்.
எம்பரியர், பெல், போயிங், அரோரா ஃபிலைட் சயன்ஸ், பிபிஸ்ட்ரல் ஏர்க்ராஃப்ட், கரேம் போன்ற பெரிய பெரிய நிறுவனங்களின் முதலீட்டால் இந்த திட்டம் செயல் வடிவம் பெறப்போகிறது என்று அவர் கூறினார்.
ஜப்பானில் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் நடக்க இருப்பதை முன்னிட்டு அந்நாட்டில் மிக விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(கட்டுரையாளர், உபெர் இந்தியா அழைப்பின் பேரில் ‘Uber Elevate summit’-ல் கலந்து கொண்டிருக்கிறார்)