மொபைல் டவுன்லோட் வேகத்தில், இந்தியாவுக்கு 109வது இடம்

வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பிராட்பேண்ட் தொலைத் தொடர்பு இணைப்பு மூலம் பெறப்படும் டவுன்லோடு வேகத்தில் இந்தியா சற்றே முன்னிலையில் உள்ளது.

ஆர்.சந்திரன்

கைப்பேசி என குறிப்பிடப்படும் மொபைல் போன்களில் தற்போது டேட்டா டவுன்லோடு – பதிவிறக்கம் செய்யும் வேகம் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இதில் 109வது இடம்தான் என ஓக்லா என்ற அமைப்பு மேற்கொண்ட வேகச் சோதனையில் தெரிய வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட சோதனைகளின்படி, இந்தியாவில் தற்போது மொபைல் போன்களில் டவுன்லோடு வேகம் 9.01 mbps, அதாவது ஒரு நொடிக்கு 9.01 மெகாபைட் என்ற அளவிலேயே உள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பரில் 8.80 mbps என இருந்தது. மொபைல் போன்களில் டவுன்லோடு வேகத்தை அதிகரிக்க தொடர்ந்து பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், இந்தியாவில் அண்மையில் மொபைல் போன்களின் பயன்பாடு கணிசமாக, அதாவது 100 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், தற்போது இந்த வேகத்தை மட்டுமே எட்ட முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்பத்தில் மிக வளர்ந்த நாடான அமெரிக்கா, மக்கள் தொகை எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள சீனா போன்ற நாடுகளைத் தாண்டி, உலக அளவில் முதல் இடத்தில் இருப்பது மட்டுமின்றி, மேற்கண்ட இரு நாடுகளிலும் சேர்ந்து மொத்தமாக எவ்வளவு டவுன்லோடு செய்யப்படுகிறதோ அதைவிட அதிகமாக இந்தியாவில் மொபைல் போன்களின் மூலம் டவுன்லோடு செய்யப்படுகிறது எனவும், இதன் தற்போதைய அளவு 150 கோடி கிஹாபைட் (Gigabyte) எனவும் நிதி ஆயுக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த கடந்த டிசம்பரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மொபைல் டேட்டா டவுன்லோடைப் பொறுத்தவரை, உலக நாடுகளில் முன்னணியில் உள்ளது நார்வேதான் எனவும், அங்கு இது 62.07 mbps அளவுக்கு வேகம் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மறுபுறம், வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பிராட்பேண்ட் தொலைத் தொடர்பு இணைப்பு மூலம் பெறப்படும் டவுன்லோடு வேகத்தில் இந்தியா சற்றே முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டு இதில் 76வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 67வது இடத்துக்கு முன்னேறியுள்ளது எனவும் ஓக்லா மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவில் இது 18.82 mbps என இருந்து, கடந்த பிப்ரவரியில் 20.72 mbps என முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிராட்பேண்ட் இணைப்பின் டவுன்லோடு வேகத்தில் உலக அளவில் முன்னிலையில் உள்ளது சிங்கப்பூர்தான் எனவும், அங்கு தற்போது 161.53 mbps வேகம் சாத்தியமாகியுள்ளது எனவும் தெரிகிறது.

ஓக்லா மேற்கொள்ளும் இந்த ஆய்வுகள் மாதம் தோறும் ஆய்வு நடத்தி தகவல் வெளியிடுகிறது. உலகம் முழுக்க 439 இடங்களில் இதற்கான வேக சோதனை சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைகளுக்கு ஆட்டோமேஷன் எனப்படும் இயந்திரங்களுக்கு பதிலாக, மனிதர்களை சார்ந்தே தகவல்கள் திரட்டி அதன் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படுவதாகவும் ஓக்லா வெளியிட்டுள்ள அறிவிப்பு தெரிவிக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close