New Update
00:00
/ 00:00
இன்சாட் 3டி.எஸ் (INSAT-3DS) வானிலை ஆய்வு செயற்கைக் கோள் உடன் ஜி.எஸ்.எல்.வி எஃ14 (GSLV-F14) ராக்கெட் இன்று (பிப்.17) மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது. ராக்கெட்டின் சாதனைகளுக்காக இந்த ராக்கெட்டுக்கு "நாட்டி பாய்" (naughty boy) என்று செல்லப் பெயர் சூட்டப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சனிக்கிழமை மாலை 5.35 மணிக்கு ஜிஎஸ்எல்வி-எஃப்14 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் 16-வது பணியாகும் என்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சினைப் பயன்படுத்தி அதன் 10-வது ஏவுதல் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கி வரும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான நிசார் இந்த ஆண்டு இறுதியில் ஏவப்பட உள்ளது. அதுவும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் ஏவப்பட உள்ளதால் இஸ்ரோ, ராக்கெட்டுக்கு இந்த பணியின் வெற்றி முக்கியமானது.
இன்சாட்-3 டி.எஸ் செயற்கைக் கோள் 2,274 கிலோ எடை கொண்டதாகும். 10 ஆண்டுகள் பணி ஆயுள் கொண்டது. இந்த செயற்கைக் கோள் 2013-ல் ஏவப்பட்ட இன்சாட்-3டி மற்றும் செப்டம்பர் 2016-ல் ஏவப்பட்ட இன்சாட்-3டி.ஆர் ஆகியவற்றின் செயல்பாடுகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு புவி அறிவியல் அமைச்சகம் முழு நிதியுதவியையும் அளித்துள்ளது.
ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிடங்களில் செயற்கைக் கோள் 36,647 கிமீ x 170 கிமீ நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக் கோள் வானிலை நிலவரத் தகவல் மற்றும் பேரிடர் நிகழ்வுகளை முன்னெச்சரிக்கையாக துல்லியமாக வழங்கும் வகையில் அனுப்பபடுகிறது. அதோடு காட்டுத் தீ, புகை, பனி மூட்டம், காலநிலை ஆய்வுகள் ஆகியவற்றை புரிந்து கொள்ளவும் இந்த செயற்கைக் கோள் உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.