கடந்த சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 2022-ம் ஆண்டுக்குள் ‘ககன்யான்’ விண்கலம் மூலம் இந்தியா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு, உலகளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 3 வீரர்கள் கொண்ட குழுவை 7 நாட்களுக்கு விண்வெளியில் அனுப்பி வைக்கும் திட்டம் இது. விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்தை இந்தியா 2022-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றும். இந்த திட்டம் குறைந்த செலவிலானதுதான். இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் ரூ.10 ஆயிரம் கோடி தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும்.
அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளன. இந்த திட்டம், அந்த வரிசையில் இந்தியாவை நான்காவது நாடாக சேர்க்க உள்ளது.
ககன்யான் மூலம் 16 நிமிட பயணத்தில் மூன்று இந்திய ஆராய்ச்சியாளர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் 5-7 நாட்கள் வரை லோ ஆர்பிட்டில் தங்கி பின்பு பூமிக்குத் திரும்புவார்கள்.
இந்த நிலையில், மூன்று ஆராய்ச்சியாளர்களில் ஒரு பெண் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த திட்டத்தில் ஒரு பெண் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம். விண்வெளி வீரர்களை தேர்வு செய்யும் படலம் இன்னும் தொடங்கவில்லை.
வீரர்கள் தேர்வு செய்வதில் நிறைய நெறிமுறைகள் உள்ளன. இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ள விமானப்படை தான் வீரர்கள் பட்டியலை வழங்கும். அதன்பிறகு தான் தேர்வுப் படலம் தொடங்கும். இப்போதே அதைக் குறித்து பேசுவது சரியாக இருக்காது என நினைக்கிறேன்.
முதல் பயணத்தில் மூன்று வீரர்கள் செல்லலாம். ஆனால், இப்போது வரை அதுகுறித்தும் இறுதி முடிவு எடுக்கவில்லை. மூன்று பேருக்கு குறைவாகவும் வீரர்கள் தேர்வாகலாம்.
இஸ்ரோ விண்வெளி வீரர்கள் யாரும் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படப்போவதில்லை. விமானப்படையில் உள்ள வீரர்களே விண்வெளிக்கு செல்ல உள்ளனர்" என்றார்.