/indian-express-tamil/media/media_files/2025/09/01/apple-iphone-17-pro-max-2025-09-01-12-40-31.jpg)
12GB ரேம், 48MP கேமரா, 5000mAh பேட்டரி... பிரீமியம் அம்சங்களுடன் ஐபோன் 17 சீரிஸ் அடுத்த வாரம் அறிமுகம்!
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் வெளியாகவுள்ளன. இந்த புதிய வரிசையை அறிமுகப்படுத்தும் அதிகாரப்பூர்வ நிகழ்வு குறித்த அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்த நிகழ்வில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்களை ஆப்பிள் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஆப்பிளின் முதன்மை போனாக இது மேம்பட்ட தொழில்நுட்பம், அப்டேட்கள் கொண்டிருக்கும். எனினும், இந்த அப்டேட்கள் விலையுயர்வையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் & டிசைன் மாற்றங்கள், வரி (Tax) போன்றவற்றின் காரணமாக, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்-ன் விலை அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விலை
கடந்த மாதத்தில் ஐபோன் 17 சீரிஸ்க்கு $50 முதல் $100 வரை விலை உயர்வு இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் $1199 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே $50 விலை உயர்வுடன் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விலை $1249 ஆகவும் $100 விலை உயர்வுடன் $1,299 ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அறிமுக நாள்
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்-ன் அறிமுக நிகழ்வு செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. "awe dropping" என்று ஆப்பிள் குறிப்பிட்ட இந்த முக்கிய நிகழ்வு, அமெரிக்காவில் காலை 10 மணிக்கு (PT) மற்றும் மதியம் 1 மணிக்கு (ET) தொடங்கும். இந்திய நேரப்படி, இந்நிகழ்வு இரவு 10:30 மணிக்கு நடக்கும்.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்
இந்த போன் A19 ப்ரோ சிப் மூலம் இயக்கப்பட உள்ளது. இது சாதனத்தின் செயல்திறன் மற்றும் ஆற்றல் திறனை கணிசமாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்புறத்தில் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட பெரிய, செவ்வக வடிவ கேமரா டிசைன் இருக்கலாம். முன்புறத்தில் 24MP செல்ஃபி கேமரா பொருத்தப்படலாம். மேலும், ஒரே நேரத்தில் முன்புற மற்றும் பின்புற கேமராக்களைப் பயன்படுத்தி வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் 8K வீடியோ ஆதரவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
கேமரா மாட்யூல் காரணமாக, பின்புறத்தில் உள்ள ஆப்பிள் லோகோ சற்று கீழே மாற்றப்படலாம். போனின் தடிமன் 8.725 மிமீ ஆக சற்று அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்-ல் 5,000mAh-க்கும் அதிகமான பெரிய பேட்டரி இருக்கலாம். ஐபோன் 16 ப்ரோ மாடலில் இருந்த 8GB ரேமிலிருந்து, இதில் 12GB ரேமாக மேம்படுத்தப்படலாம். அலுமினிய ஃபிரேம் மற்றும் கண்ணாடி-அலுமினியம் கலந்த பின்புற பேனல் இருக்கலாம். மேலும், மேம்படுத்தப்பட்ட வெப்பத்தைக் குறைப்பதற்காக (cooling) வேப்பர் சேம்பர் தொழில்நுட்பமும் இதில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.