சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்க உள்ளது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
திஷா பாரத் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட சந்திரயான்-3 பற்றிய பேச்சின் போது இஸ்ரோ தலைவர் சோமநாத் இவ்வாறு கூறினார். “எல்லாம் தோல்வியுற்றாலும், அனைத்து சென்சார்களும் தோல்வியடைந்தாலும், எதுவும் வேலை செய்யவில்லை என்றாலும், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும். அதற்கு ஏற்றாற்போல் லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதற்கு உந்துவிசை அமைப்பு நன்றாக வேலை செய்யும். இந்த முறையும் (விக்ரமில் உள்ள) இரண்டு என்ஜின்கள் வேலை செய்யவில்லை என்றாலும், விண்கலத்தால் தரையிறங்க முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்,” என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ செய்தியின்படி நிகழ்வின் போது இஸ்ரோ தலைவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: தற்போதைய நிலவு பயணங்கள் கடந்த கால நிலவு திட்டங்களில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2023 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. ஏவுகணைத் தொகுதியிலிருந்து புறப்பட்டு பிரிந்த பிறகு, சந்திரயான்-3 விண்கலம் ஒவ்வொரு முறையும் பூமியின் உயரமான சுற்றுப்பாதையில் ஏறும் பல கட்டுப்பாடான இயக்கங்களை மேற்கொண்டது, இறுதியாக ஆகஸ்ட் 5 அன்று "டிரான்ஸ்லூனர்" சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது.
பின்னர், ஆகஸ்ட் 6, ஞாயிற்றுக்கிழமை, விண்கலம் சந்திர சுற்றுப்பாதையில் நுழைந்தது. இது முதலில் சந்திரனில் இருந்து குறைந்தபட்சமாக 164 கிலோமீட்டர் தொலைவிலும், சந்திரனில் இருந்து அதிகபட்சமாக 18,074 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள சுற்றுப்பாதையை அடைந்தது. பின்னர் விண்கலம் ஒரு கட்டுபாடான இயக்கத்தை முடித்து, 170 க்கு 4313 கிலோமீட்டர் சுற்றுப்பாதைக்கு சென்றது. மிஷனின் அடுத்த சுற்றுப்பாதை இயக்கம் இன்று பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய தேதிகளில் மேலும் இரண்டு இயக்கம் அதன் இறுதி 100 கிலோமீட்டருக்கு 100 கிலோமீட்டர் சுற்றுப்பாதையை அடையும்.
அந்த இறுதி சுற்றுப்பாதையை அடைந்த பிறகு, விண்கலம் ஒரு டீபூஸ்ட் செயல்முறையைத் தொடங்கும், அங்கு ஆகஸ்ட் 23 அன்று நிலவு மேற்பரப்பில் தரையிறங்கும் தொகுதி பிரிக்கப்படுவதற்கு முன்பு கிராஃப்ட் வேகம் குறையும்.
“இந்த முறையும் இரண்டு என்ஜின்கள் வேலை செய்யவில்லை என்றாலும், விண்கலத்தால் தரையிறங்க முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். எனவே, அல்காரிதம்கள் சரியாகச் செயல்படும் பட்சத்தில், பல தோல்விகளைச் சமாளிக்கும் வகையில் முழு வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது,” என்று விக்ரம் லேண்டரைப் பற்றி அதே நிகழ்வின் போது இஸ்ரோ தலைவர் கூறினார்.
சந்திரயான்-3, சந்திரனில் மென்மையாக தரையிறங்குவதை செயல்படுத்திய உலகின் நான்காவது நாடாக இந்தியாவை வரலாற்றுப் பக்கங்களில் நிலைநிறுத்தும். முன்னதாக சந்திரயான் -2 திட்டம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இதுவரை இதைச் சாதித்துள்ள மற்ற நாடுகள். சந்திரயான்-2 தவிர, இஸ்ரேல் மற்றும் ஜப்பானின் தனியார் தலைமையிலான முயற்சிகளும் நிலவில் விழுந்து நொறுங்கியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil