ISRO Chandrayaan 2 Vikram Lander in single piece: சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட, அதனுடைய 48வது நாளில் லாண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்குமாறு வடிவமைக்கப்பட்டது. நிலவில் தரையிறங்க சரியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் போது லேண்டர் விக்ரம் சிக்னல்களை இழந்து நிலவில் ஹார்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியது. இஸ்ரோ எவ்வளவோ முயற்சி செய்தும் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர், லேண்டர் இருக்குமிடத்தை தெர்மல் போட்டோவாக எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பியது. அந்த புகைப்படத்தை ஆய்வு செய்கையில் லேண்டர் விக்ரம் உடையவோ சேதாரம் அடையவோ இல்லை என்றும் ஒருபுறமாக சாய்ந்து, இஸ்ரோ இலக்காக நிர்ணயத்த இடத்தில் விழுந்துள்ளது என்றும் இஸ்ரோ தரப்பு அறிவித்துள்ளது. எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் லேண்டருடன் தொடர்பினை மீண்டும் ஏற்படுத்த முயற்சி செய்கிறோம் என்று இஸ்ரோவின் டெலிமேட்டரி துறை (ISTRAC) அறிவித்துள்ளது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க :
இஸ்ரோ என்ன கூறுகிறது?
சந்திராயன் 2 ஆர்பிட்டர் லேண்டர் ரோவர் என மூன்று பாகங்களை உள்ளடக்கியது. அதில் லேண்டரும், ரோவரும் 14 நாட்கள் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. சனிக்கிழமை காலையில் இஸ்ரோ தலைமை அதிகாரி சிவன் கூறுகையில் அடுத்த “14 நாட்களில் தங்களால் இயன்ற அளவு லேண்டருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்கின்றோம்” என்று கூறினார். பின்பு ஞாயிற்றுக்கிழமை லேண்டர் இருக்குமிடம் கண்டறியப்பட்டது. இஸ்ரோ கூறுகையில் லேண்டரின் அனைத்து பாகங்களும் செயலிழந்து விட்ட நிலையில் அதனை தொடர்பு கொள்வது மிகவும் கடினமான ஒன்றாகும். சாஃப்ட் லேண்டிங் செய்திருந்தால் மட்டுமே, அனைத்துக் கருவிகளும் முறையாக இயங்குகின்ற பட்சமே தொலைதொடர்பு வாய்ப்புகள் சாத்தியப்படும் என்று அறிவித்தது.
ஜியோ ஸ்டேஷனரி சுற்றுவட்டப்பாதையில் செயல்படும் செயற்கைக்கோள்கள் சில நேரங்களில் சிக்னல் அனுப்பாத பட்சத்தில், அதை மீண்டும் சரி செய்ய எங்களால் இயலும். அதில் எங்களுக்கு அனுபவமும் உண்டு. ஆனால் விக்ரமின் நிலை சற்று வித்தியாசமானது. விக்ரம் ஏற்கனவே நிலவில் தரையிறங்கி விட்டது மேலும் அதில் இருக்கும் ஆண்டனாக்கள் பூமியை பார்த்த வண்ணம் அல்லது ஆர்பிட்டர் நோக்கிய இருக்கவேண்டும். அப்போது தான் சிக்னல்களைப் பெற இயலும். ஆனால் தற்போது சாய்ந்து உள்ள நிலையில் அதனை சரி செய்வது சற்று கடினமான விஷயமாகவே இருக்கிறது. ஆனாலும் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையுடன் செயல்படுகின்றோம்.
மேலும் படிக்க : சந்திரயான் 2-ன் கடைசி 5 நிமிடங்கள் : இஸ்ரோவில் நடந்தது என்ன?