மங்கள்யானின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு செவ்வாய் கிரகத்திற்கான இரண்டாவது பயணத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
செவ்வாய் கிரகத்திற்கான இரண்டாவது பயணத்தை உருவாக்கும் பணியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள இந்திய விண்வெளி நிறுவனம், சிவப்பு கிரகத்தில் விண்கலத்தை எவ்வாறு தரையிறக்கப்படும் என்ற திட்டதை வெளிப்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தனது விண்கலத்தை தரையிறக்கி இதுவரை அமெரிக்கா, சீனா ஆகிய 2 நாடுகள் மட்டுமே சாதனை படைத்துள்ளன.
வேறொரு கிரகத்தில் விண்கலத்தை தரையிறக்கும் எலைட் கிளப்பில் சேரும் 3-வது நாடாக இந்தியா மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.மங்கள்யான்-2 மெகா திட்டம் குறித்து தேசிய தொழில்நுட்ப தினத்தில் இஸ்ரோ வெளியிட்டது.
மங்கள்யான்-2 திட்டத்தில் இஸ்ரோ ஏற்கனவே ஈடுபட்டு வருகிறது. இதில் நாசாவின் பெர்ஸ்வரன்ஸ் ரோவரைப் போலவே ரோவர் மற்றும் ஹெலிகாப்டர் கலவையை பயன்படுத்த உள்ளது. இந்திய விண்வெளி நிறுவனம் ஒரு சூப்பர்சோனிக் பாராசூட் மற்றும் ரெட் பிளானட்டில் ரோவரை நிலைநிறுத்துவதற்கான ஸ்கை-கிரேனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பதும் இன்று கூறப்பட்டது, LVM3 (மார்க்-III ) ராக்கெட் மூலம் மங்கள்யான்-2 விண்கலம் ஏவப்பட உள்ளது.
ரோவரை நிலைநிறுத்துவதற்கு ஸ்கை கிரேன் பயன்பாடு முதல் முறை அல்ல. நாசா ஏற்கனவே இதை பெர்சிவரன்ஸ் ரோவரில் பயன்படுத்தி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் ரோவரை அதன் மிகவும் துல்லியமான மற்றும் வெற்றிகரமான தரையிறக்கத்திற்கு நாசா ஸ்கை-கிரேன் அமைப்பை உருவாக்கியது.
இந்த அமைப்பு கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் துல்லியமான தரையிறக்கத்தை அனுமதிக்கிறது, காற்றுப்பைகள் அல்லது சரிவுகளின் தேவையைத் தவிர்க்கிறது. ஸ்கை கிரேன் ரோவர் நிமிர்ந்து தரையிறங்குவதை உறுதிசெய்கிறது மற்றும் சவாலான நிலப்பரப்பில் கூட அதன் பணியைத் தொடங்கத் தயாராக இருக்கும். இந்திய ரோவருக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை இஸ்ரோ உருவாக்கவுள்ளது.