இஸ்ரோ, நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த ஜூலை 22ம் தேதி 'சந்திரயான் 2' விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி நிலவின் தென்துருவத்தை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
நிலவை நோக்கி சென்று கொண்டிருக்கும் சந்திரயான் - 2 விண்கலம், இன்று(ஆக.20) நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ள நிலையில், சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதை, பிரதமர் மோடியுடன் சேர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பிற்காக இஸ்ரோ நடத்தும் வினாடி - வினா நிகழ்ச்சிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, MyGov.in தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "விண்வெளி நிகழ்ச்சி தொடர்பான ஆர்வத்தை அதிகரிக்கும் பொருட்டு, இன்றோடு நிறைவடைய இருந்த ஆன்லைன் வினாடி - வினா போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஆக.25 இரவு 11:59 வரை நீட்டிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்கள் இஸ்ரோ நடத்தும் போட்டியில் பங்கு பெறலாம். இதற்கு mygov.in https://www.mygov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதே போல், பேஸ்புக், கூகுள், டுவிட்டர், லிங்க்ட்இன் (Linkedin) உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாகவும் க்யூ.ஆர் கோட் பயன்படுத்தி பதிவு செய்யலாம். இதற்கு ஆகஸ்ட் 20ம் தேதி கடைசி நாளாகும்.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களது பெயர், முகவரி, படிக்கும் பள்ளி, மின்னஞ்சல் முகவரி என சுயவிபரங்களை பதிவு செய்ய வேண்டும். போட்டியில் ஒரு மாணவர், ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும்.
ஆன்லைன் வழி போட்டி தான் நடைபெறும். மொத்தம் 10 நிமிடங்களில் 20 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். மாணவர்கள் கேள்விகளை புரிந்து கொள்ளுவதற்கு வசதியாக பெற்றோர்கள், நண்பர்களை உதவிக்கு வைத்துக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் விடையைக் கூறக்கூடாது. கேள்வியை மட்டும் போட்டியாளர்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டும்.
போட்டியின் போது ஏதேனும் முறைகேட்டில் ஈடுபடுவது தெரிந்தால், அந்த மாணவர் உடனே போட்டியில் இருந்து விலக்கப்படுவர். மேலும், முழுமையான விபரங்களுக்கு https://www.mygov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.