கடந்த 2 தினங்களுக்கு முன் 2 செயற்கைக் கோள்களையும் 3 மீட்டர் தொலைவுக்கு கொண்டு வந்த நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று வியாழக்கிழமை ஸ்பேடெக்ஸ் செயற்கைக் கோள்களை விண்வெளியில் இணைத்து டாக்கிங் செயல்முறையை வெற்றிகரமாக செய்துள்ளது.
இஸ்ரோ இதுகுறித்து வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இஸ்ரோ இதற்கு முன்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஜனவரி 7 மற்றும் 9 ஆகிய இரண்டு முறை டாக்கிங் செயல்முறையை ஒத்திவைத்தது.
பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட் மூலம் இந்த ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைக்கோள்கள் டிசம்பர் 30ஆம் தேதி ஏவப்பட்டன. இந்த வெற்றிகரமான டாக்கிங் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக டாக்கிங் செயல்முறையை வெற்றிகரமாக செய்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ஜனவரி 12 அன்று, இரண்டு செயற்கைக் கோள்களையும் 15 மீட்டர் மற்றும் 3 மீட்டர்கள் வரை கொண்டு வருவதற்கான சோதனை முயற்சி வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ கூறியது. "15 மீ மற்றும் 3 மீ வரை அடைய ஒரு சோதனை முயற்சி செய்யப்பட்டது. பாதுகாப்பான தூரத்திற்கு விண்கலன்கள் கொண்டு வரப்பட்டது. தரவை மேலும் பகுப்பாய்வு செய்த பிறகு டாக்கிங் செயல்முறை செய்யப்படும்” என்று இஸ்ரோ கூறியது.
'டாக்கிங்' இஸ்ரோவின் வருங்கால திட்டத்திற்கு மிக முக்கிய திட்டமாகும். டாக்கிங் திறன் தேவைப்படும் முதல் உண்மையான இந்திய பணி சந்திரயான்-4 ஆக இருக்கலாம். சந்திரயான்-4 திட்டத்தில் நிலவு மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் வெப்பத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த பணியின் ரீ-என்ட்ரி மாட்யூல் தனியாக ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
சந்திரனில் இருந்து மாதிரிகளை எடுத்துச் செல்லும் பரிமாற்ற தொகுதி பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் தொகுதியுடன் வந்து டாக்கிங் செய்யப்பட்டு பூமிக்கு கொண்டுவரப்படும்.
இந்திய விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையத்தை அமைப்பதற்கும் டாக்கிங் தேவைப்படும். முதல் தொகுதி 2028-ல் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: ISRO successfully docks two satellites in space, India fourth country to achieve feat after US, Russia, China