இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 விண்கலம் செவ்வாயன்று சூரியன்-பூமி பகுதியில் உள்ள எல்.1 புள்ளியைச் சுற்றி தனது முதல் ஒளிவட்டப் பாதையை (first halo orbit) நிறைவு செய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, விண்கலம் 2-வது சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பர் 2, 2023 அன்று ஏவப்பட்டது. தொடர்ந்து 5 மாத காலப் பயணத்திற்கு பின் பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதன் இலக்கான லாங்ரேஞ்சியன் புள்ளியில் ஜனவரி 6, 2024 அன்று விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
அதன் பின் அங்கிருந்தபடி சூரியனை ஆய்வு செய்து தரவுகளை அனுப்பியது. இந்நிலையில், ஆதித்யா எல்.1 விண்கலம் தனது முதல் ஒளிவட்டப் நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆதித்யா-எல்1 விண்கலம் எல்.1 புள்ளியைச் சுற்றி வர முதல் ஒளிவட்டப் பாதையில் 178 நாட்கள் ஆனதாக கூறியுள்ளது. இஸ்ரோ மேலும் கூறுகையில், இந்த சுற்றுப்பாதையை பராமரிக்க முதல் ஒளிவட்டப் பாதையில் இரண்டு ஸ்டேஷன் கீப்பிங் சுழற்சி பிப்ரவரி 22 மற்றும் ஜூன் 7 அன்று மேற்கொண்டது. இதன் பின் 2-வது ஹாலோ ஆர்பிட் பாதையில் தற்போது வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கி உள்ளதாக கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“