ஜப்பானின் ‘மூன் ஸ்னைப்பர்’ ஸ்லிம் மிஷன் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடு என்ற பட்டியலில் ஜப்பானும் தற்போது இணைந்துள்ளது. இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தை தொடர்ந்து நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாட்டில் ஜப்பான் 5-வது இடம் பிடித்துள்ளது.
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) நேற்று வெள்ளியன்று அதன் ஸ்மார்ட் லேண்டர் ஃபார் இன்வெஸ்டிகேட்டிங் மூன் (SLIM) வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் இந்திய நேரப்படி இரவு 8.50 மணிக்கு தரையிறங்கியதாக அறிவித்தது. லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய போதிலும், "மூன் ஸ்னைப்பர்" ஒரு பெரிய சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. லேண்டரின் சூரிய மின்கலங்கள் (solar cells)சக்தியை உருவாக்கவில்லை.
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளில் பட்டியலில் ஜப்பான் 5-வது இடம் பிடித்துள்ளது. அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை ஆகும். ஜப்பான் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஹிட்டோஷி குனினாகா கூறுகையில், "SLIM இப்போது அதன் பேட்டரியில் மட்டுமே இயங்குகிறது, மேலும் அது சேமித்த தரவுகளை பூமிக்கு மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்" என்றார்.
விண்கலத்தை உயிர்புடன் வைக்க அதன் ஹீட்டரை அணைப்பது போன்ற செயல்களை செய்தாலும் விண்கலத்தின் பேட்டரி சந்திர மேற்பரப்பின் கடுமையான சூழ்நிலைகள் காரணமாக சில மணிநேரங்கள் மட்டுமே செயல்படும். குனினாகா கூறுகையில், சூரிய ஒளி வரும் திசையில் லேண்டரை மாற்றும் போது அது செல்கள் செயல்பட உதவும் என்று கூறுகிறார்.
SLIM மிஷன் மூன் ஸ்னைப்பர் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அது நிர்ணயிக்கப்பட்ட இலக்கிலிருந்து 100 மீட்டருக்குள் தரையிறங்க முயற்சித்தது. வழக்கமாக, விண்கலங்கள் அதன் இலக்கிலிருந்து சில கிலோ மீட்டர்களுக்குள் துல்லியமாக இருக்கும். ஆக்சிஜன் மற்றும் நீரின் ஆதாரமாக இருக்கும் நிலவின் மலைப்பாங்கான பகுதிகளை அடைய இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் எதிர்கால ஆய்வுகளில் இந்த தொழில்நுட்பம் ஒரு சக்திவாய்ந்த யோசனையாக இருக்கும் என JAXA நம்புகிறது. இந்த life-sustaining elements ராக்கெட்டுகளுக்கான எரிபொருள் தேவையாகவும் முக்கியமான பயன்பாட்டில் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“