ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (JAXA) "நிலவை ஆய்வு செய்வதற்கான ஸ்மார்ட் லேண்டர்" அல்லது SLIM லேண்டர் இன்று (செவ்வாய்) மதியம் இந்திய நேரப்படி 1.21 மணிக்கு நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததாக அறிவித்தது.
இந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளின் பிரத்யேக பட்டியலில் ஜப்பான் 5-வது நாடாக இடம்பெறும்.
முன்னதாக இந்தியா இந்த ஆண்டு சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி வரலாறு படைத்தது.
SLIM ஆனது நிலவின் தெற்கு மற்றும் வட துருவங்களை இணைக்கும் நீள்வட்ட நிலவு சுற்றுப் பாதையில் சுமார் 6.4 மணி நேர இடைவெளியில் நுழைக்கப்பட்டது. இதன் உயரம் சந்திரனுக்கு (பெரிலூன்) மிக நெருக்கமான இடத்தில் சுமார் 600 கிலோமீட்டராகவும், சந்திரனில் இருந்து (அப்போலூன்) தொலைவில் உள்ள புள்ளியில் 4,000 கிலோமீட்டராகவும் இருக்கும்.
இப்போதிலிருந்து அடுத்த மாதம் ஜனவரி நடுப்பகுதி வரை, ஜப்பானிய விண்வெளி நிறுவனம் அபோலூன் புள்ளியைக் குறைக்கும். பெரிலூன் புள்ளியை ஜனவரி 19 ஆம் தேதி 15 கிலோமீட்டர் உயரத்திற்கு குறைக்கப்படும். ஜனவரி 20-ம் தேதி நிலவில் லேண்டர் இறங்கத் தொடங்கும்.
ஸ்லிம் விண்கலம் (SLIM) இந்த ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி ஏவப்பட்டது. "மூன் ஸ்னைப்பர்" என்று அழைக்கப்படும் SLIM, சந்திரனுக்கு தனித்துவமான நீண்ட பாதையில் சென்றது. வெற்றி பெற்றால், சந்திரனில் தரையிறங்கும் மிகச்சிறிய மற்றும் எடை குறைந்த விண்கலமாகவும் இது இருக்கும்.
சுவாரஸ்யமாக, சந்திரனில் மென்மையான தரையிறக்கத்தை இலக்காகக் கொண்ட இரண்டாவது ஜப்பானிய பணி SLIM ஆகும். டோக்கியோவை தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஐஸ்பேஸ் தலைமையிலான தனியார் விண்வெளி மையம்., ஹகுடோ என்ற விண்கலத்தை ஏவி இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சந்திர மேற்பரப்பில் அது விழுந்து தோல்வியடைந்தது.
SLIM என்பது மிகச் சிறிய விண்கலம், வெறும் 200 கிலோ கிராம் எடை கொண்டது. அதேசமயம் சந்திரயான் -3 லேண்டர் சுமார் 1,750 கிலோ கிராம் எடை கொண்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட தளத்திலிருந்து 100 மீட்டருக்குள் தரையிறங்குவதன் மூலம் துல்லியமான தரையிறங்கும் திறன்களை நிரூபிப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
SLIM பூமத்திய ரேகைப் பகுதியில் உள்ள ஷினோலி என்ற சிறிய பள்ளத்தின் அருகே தரையிறங்குவதை இலக்காக கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“