இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையைத் தொடங்கி வைத்தார். ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதற்கட்டமாக 5ஜி சேவையை சில நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளன.
மற்ற நகரங்களில் படிப்படியாக சேவை விரிவுபடுத்தப்படும் என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், Jio True 5G அடுத்தாண்டு டிசம்பர்-க்குள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றார். அதேசமயம் ஏர்டெல் தனது ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை மார்ச் 2024க்குள் நாடு முழுவதும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்தநிலையில் பயனர்கள் பலருக்கு சந்தேசம் எழுந்துள்ளது. அது என்னவென்றால், நம் ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையைப் பயன்படுத்த புதிய சிம் கார்டு வாங்க வேண்டுமா? அல்லது ஏற்கனவே உள்ள 4ஜி சிம் மூலமாகவே 5ஜி பயன்படுத்தலாமா? என்பது தான். தொடர்பு நிறுவனங்கள் இதற்கு அதிகாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளனர்.
5ஜி பயன்படுத்த புது சிம் வாங்கத் தேவையில்லை என்பது தான் விடை. ஏர்டெல் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கோபால் விட்டல் கூறுகையில், "கடந்த 27 ஆண்டுகளாக இந்தியாவின் தொலைத்தொடர்பு புரட்சியில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை தர எப்போதும் முயன்று வருகிறோம்.
அதில் ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றொரு படி. ஏர்டெல் 5ஜி பயன்படுத்த வாடிக்கையாளர்கள் புது சிம் கார்டு வாங்க தேவையில்லை. ஏற்கனவே உள்ள சிம் மூலம் 5ஜி பயன்படுத்தலாம். பயனர்கள் வேறு எந்த நெட்வொர்க் பயன்படுத்துபவராக இருந்தாலும், 5ஜி பயன்படுத்தலாம். புது சிம் வாங்கத் தேவையில்லை" என்று கூறினார். ஜியோ நிறுவனமும் அதையே தெரிவித்துள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி பயன்படுத்த புது சிம் கார்டு தேவையில்லை. ஏற்கனவே உள்ள சிம் கார்டுகளில் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க Airtel 5G Plus launched: உங்கள் போனில் ஏர்டெல் 5ஜி பயன்படுத்த முடியுமா?.. இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!
கொல்கத்தா, டெல்லி, மும்பை, வாரணாசி உள்ளிட்ட 4 நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையை வழங்குகிறது. ஏர்டெல் ஒரு படி மேலே 8 நகரங்களில் சேவை வழங்குகிறது. டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரி ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை வழங்குகிறது. ஏர்டெல் எந்தெந்த நிறுவன ஸ்மார்ட்போன் மற்றும் ஆப்பிள் போன் மாடங்களில் தனது 5ஜி சேவையை பெற முடியும் என பட்டியல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.