ரிலையன்ஸ் ஜியோ, ஜியோ ஏர் ஃபைபர் என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இணைய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. முற்றிலும் 5ஜி தரத்தில் இந்த சேவை வழங்கப்படுகிறது. நிமிடத்திற்கு 1000 எம்.பி.பி.எஸ் என அதி வேக இணைய சேவையை வழங்க உள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 8 நகரங்களில் சேவை வழங்கப்பட உள்ளது. அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் புனே நகரங்களில் ஜியோ ஏர் ஃபைபர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நகரங்களில் வசிப்பவர்கள் ஜியோ ஏர்ஃபைபர் வசதியைப் பெறலாம்.
ஜியோ ஏர் ஃபைபர் மாதம் ரூ.599 முதல் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களும் இரு வகைகளாக ஏர் ஃபைபர், ஏர் ஃபைபர் மேக்ஸ் (AirFiber Max) எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் தலா 3 வகைகளாக கட்டணம் மற்றும் ஓ.டி.டி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து திட்டத்திலும் 550+ டிஜிட்டல் சேனல்கள் மற்றும் 14 செயலிகள் பொதுவாக வழங்கப்படுகிறது.
ஜியோ ஏர் ஃபைபர் திட்டம்
ரூ.599 விலையில் 30 எம்.பி.பி.எஸ் இணைய வேகம் மற்றும் 550க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேனல்களை வழங்குகிறது. இந்த பேஸிக் திட்டத்தில் 14 செயலிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ரூ.899 விலையில் 100 எம்.பி.பி.எஸ் இணைய வேகம் டிஜிட்டல் சேனல்கள் மற்றும் செயலிகள். அடுத்து ரூ.1199 விலையில் அதே 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இந்த அனைத்து வசதிகளுடன் கூடுதலாக நெட்பிலிக்ஸ், அமேசான், ஜியோ சினிமா ப்ரிமியம் ஓ.டி.டி வசதிகள் வழங்கப்படுகிறது.
ஜியோ ஏர் ஃபைபர் மேக்ஸ்
அதிக வேக இணையம் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த திட்டத்தை பார்க்கலாம். இந்த திட்டத்தில் அனைத்திலும் 550+ டிஜிட்டல் சேனல்கள், 14 செயலிகள் மற்றும் நெட்பிலிக்ஸ், அமேசான், ஜியோ சினிமா ப்ரிமியம் ஓ.டி.டி வசதிகள் கூடுதலாக வழங்கப்படுகிறது. இணைய வேகம், விலை மட்டுமே மாறுபடுகிறது.
ரூ.1499 விலையில் 300 எம்.பி.பி.எஸ் இணைய வேகம் , ரூ.2499 விலையில் 500 எம்.பி.பி.எஸ் மற்றும் அதிகபட்சமாக மாதம் ரூ.3999 விலையில் 1000 எம்.பி.பி.எஸ் இணைய வேகத்தை பெற முடியும். எனினும் இந்த திட்டம் அன்லிமிடெட் திட்டமாக அல்லது உச்சவரம்பு உள்ளதா என்பது குறித்து தெரிவிக்கப்பட வில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“