/indian-express-tamil/media/media_files/2025/05/30/BDeiwcC7za03piw5O386.jpg)
களத்தில் இறங்கிய ரிலையன்ஸ் ஜியோ: சிங்கிள் சார்ஜ் 100 கி.மீ. பயணம்; ஜியோ இ-ஸ்கூட்டர் அறிமுகம்?
நாட்டின் நகர்ப்புற போக்குவரத்து வேகமாக மாறி வருகிறது. எரிபொருள் செலவு பிரச்னையில் இருந்து விடுபட பலர் மின்சார ஸ்கூட்டர்களைத் தேர்வு செய்கின்றனர். வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வடிவமைப்புகளை கருத்தில் கொண்டு பல அம்சங்களுடன் புதிய வகை மின்சார ஸ்கூட்டர்களையும் பிராண்டுகள் கொண்டு வருகின்றன. அண்மையில், ரிலையன்ஸ் ஜியோ ஜியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2025 என்ற புதிய மின்சார ஸ்கூட்டரை சந்தைக்கு கொண்டு வரப்போகிறது என்று சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகின. தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் ஏராளமான வசதிகளுடன் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனத் துறையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்களில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 முதல் 100 கி.மீ. தூரம் பயணம் செய்யும் சக்தி வாய்ந்த பேட்டரி மற்றும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் அடங்கும். மேலும், பயனர்களின் வசதிக்காக USB சார்ஜிங் போர்ட், கிளவுட் இணைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், LED டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் இணைப்பு போன்ற தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என 3 சவாரி முறைகள் இருக்கும். இது நீர் மற்றும் தூசி பாதுகாப்பிற்கான ஐபி 67 மதிப்பீட்டையும் கொண்டிருக்கும்.
இதன் விலை பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதபோதிலும், ஒரு லட்சம் ரூபாய் என கணிக்கப்படுகிறது. குறைந்த விலையில் இத்தகைய வசதிகளை வழங்கும் வகையில் ஜியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளதால், தற்போது சந்தையில் இருக்கும் ஓலா, ஏதர், பஜாஜ் போன்ற பிரபல நிறுவனங்களுக்கு பெரிய போட்டியாக அமையும் வாய்ப்பு அதிகம். விவசாயம் முதல் வாகனங்கள் வரை பல துறைகளில் தனது சாதனையை நிலைநாட்டியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மூலம் வாகனத் துறையிலும் ஒரு தனித்தன்மையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த செய்தி இணையத்தில் புயலை ஏற்படுத்தியிருந்தாலும், இ-ஸ்கூட்டர் அறிமுகம் குறித்த செய்தியை ஜியோ திட்டவட்டமாக மறுத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இப்போதைக்கு எந்த மின்சார ஸ்கூட்டர்களையும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. பல்வேறு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டவை முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை. எனவே, ஜியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்திற்காக காத்திருப்பவர்கள் வேறு எந்த பிராண்ட் ஸ்கூட்டரையும் தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.