Joint European Torus: நியூக்ளியர் ஃப்யூஷன் எனெர்ஜி (அணுக்கரு இணைவு) அல்லது சூரியனின் பணியை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி அதன் மூலம் சக்தியை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில் வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளனர் இங்கிலாந்து விஞ்ஞானிகள். குறைவான கார்பனை வெளியிடும் வகையிலும், தற்போது நடைமுறையில் இருக்கும் அணுசக்தி உற்பத்தியைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பான வகையிலும் எரிசக்தியை இந்த ஃப்யூஷன் எனெர்ஜி தொழில்நுட்பத்தின் மூலம் பெற இயலும் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஜாய்ண்ட் ஐரோப்பியன் டோரஸ் என்ற மையத்தில் நியூக்ளியர் ஃப்யூஷன் மூலம் 59 மெகாஜூல்ஸ் சக்தியை உற்பத்தி செய்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். 5 நொடிகளில் ஒப்பீட்டளவில் 11 மெகாவாட்ஸ் மின்சாரத்தையே உற்பத்தி செய்துள்ளது இந்த ஆராய்ச்சி. 66 கெட்டில் தண்ணீரை சூடுபடுத்தவே இது உதவும் என்றாலும் கூட, ஃப்ரான்ஸில் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டு வரும் ரெக்டரில் இதே சோதனை பெரிய அளவில் வெற்றி அடையும் போது, உலகில் எரிசக்தி உற்பத்தியால் வெளியேற்றப்படும் கார்பனின் அளவானது குறையத்துவங்கும். மேலும் ரேடியோ கதிர்களின் வீச்சும் குறைந்து பாதுகாப்பான சூழல் உருவாக வழி வகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
இது தொடர்பாக இங்கிலாந்தியின் அணுசக்தி அதிகார மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு கிலோ நிலக்கரி, எண்ணெய் அல்லது இயற்கைவாயுவைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் எரிசக்தியைக் காட்டிலும் 10 மில்லியன் அதிக அளவு எரிசக்தியை இந்த ஃப்யூஷன் ஃப்யூல் கொண்டு உற்பத்தி செய்யமுடியும் என்று அறிவித்துள்ளனர்.
டோக்காமக் (Tokamak) என்ற இயந்திரத்தை பயன்படுத்தி இந்த எரிசக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அணுக்கரு இணைவு ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள ஆய்வகங்களில் ஜே.இ.டி. என்பது மிகப்பெரிய ஆய்வகமாகும். இந்த ஆய்வத்தில் உள்ள டோக்காமக் என்ற இயந்திரத்தில் ஹைட்ரஜன் வாயுவின் ஐசோடோப்களான ட்ரீட்டியம் மற்றும் டெயூடெரியம் ஆகியவை வைக்கப்பட்டு, சூரியனின் மையத்தில் நிலவும் வெப்பத்தைப் போன்று 10 மடங்கு வெப்பம் உருவாக்கப்படும். டோக்கோமக் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் சூப்பர்கண்டெக்டர் எலெக்ட்ரோமேக்னட் சுழலும் போது ஏற்படும் சக்தி வெப்பமாக மாற்றப்பட்டு இந்த வெப்பம் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு முடிவுகள் இந்தியா உட்பட 7 நாடுகளை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஐ.டி.இ.ஆர். அமைப்பிற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஐ.டி.இ.ஆர் என்பது ஜே.இ.டி. போன்றே, அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்தும் அமைப்பாகும். இந்த அமைப்பில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, கொரியா, சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளாக உள்ளது. இதன் தலைமை அலுவலகம் பிரான்சில் அமைந்துள்ளது.
தெற்கு ஃபிரான்சில் உருவாக்கப்பட்டு வரும் மிகப்பெரிய ஐ.டி.இ.ஆர். ஆய்வகத்தில் இந்த சோதனை வெற்றி பெரும் பட்சத்தில் பசுமையக வாயுக்கள் வெளியீடு முற்றிலும் தடுக்கப்படும். இதில் இருந்து உருவாகும் ரேடியோ கதிர்களின் ஆயுட்காலமும் மிகவும் குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.