சென்னைக்கு அருகே ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இந்தியாவின் ஒரே விண்வெளி ஏவுதளம் 'சதீஷ் தவான்' விண்வெளி ஏவுதள மையம் உள்ளது. தற்போது வரை இந்தியாவில் ஏவப்பட்ட அனைத்து ராக்கெட்களும் இங்கிருந்து தான் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி என அனைத்து பெரிய ராக்கெட்களும் இங்கிருந்து தான் விண்வெளிக்கு அனுப்பபட்டன.
இந்நிலையில், இஸ்ரோ இந்தியாவில் 2-வது ஏவுதளம் அமைக்க திட்டமிட்டது. அதன்படி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவில் 2-வது ஏவுதள மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. குலசேகரப்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் ஏவுதளம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராக்கெட் ஏவுதளம் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி இஸ்ரோ தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சேவை மையம், ராக்கெட் ஏவுதளம், ஏவுதள அடித்தளக் கட்டமைப்பு போன்றவற்றை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
ரூ. 20.29 கோடி மதிப்பில் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப சேவை கட்டடம், ஏவுதள தீயணைப்பு நிலையம் மற்றும் எஸ்.எஸ்.எல்.வி ஏவுதள மையம் உள்ளிட்டவைகளுக்கான கட்டுமான பணி ஒப்பந்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜூலை மாதம் 22ம் தேதி 2.30 மணி வரை ஒப்பந்தத்திற்கான ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“