/indian-express-tamil/media/media_files/2025/09/29/easy-tv-2025-09-29-18-55-06.jpg)
வெறும் டிவி அல்ல... இது கேர்-டேக்கர்! வயதானவர்களுக்காகவே பிரத்யேகமாக எல்.ஜி. ஈஸி டிவி அறிமுகம்!
உலகளவில் டிவி விற்பனை மந்தநிலையில் இருக்கும்போது, தென் கொரிய ஜாம்பவான் எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ் அசத்தலான முடிவை எடுத்து உள்ளது. மந்தமான சந்தைக்கு புது ரத்தம் பாய்ச்சும் முயற்சியாக, எல்.ஜி. புதிய வாடிக்கையாளர் பிரிவைக் குறி வைத்துள்ளது. மூத்த குடிமக்கள் (Senior Consumers). அண்மையில், சியோலில் உள்ள எல்.ஜி. ட்வின் டவர்ஸில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 'LG Easy TV' எனும் சீனியர்களுக்கான இந்த பிரத்யேக டிவியின் அம்சங்கள் வெளியிடப்பட்டன. 'சில்வர் ஜெனரேஷனுக்காக' (Silver Generation) வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் பிரத்தியேகமாக ஒரு தயாரிப்பை வெளியிடுவது இதுவே முதல் முறை என்று எல்.ஜி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
ஏன் இந்த முயற்சி?
70%க்கும் அதிகமான சீனியர் வாடிக்கையாளர்கள், "டிவிகளைப் பயன்படுத்துவது மிக கடினம்" என்று புகாரளித்ததால், அந்தப் பிரச்னைகளை முழுவதுமாகத் தீர்க்கும் நோக்குடன் இந்த டிவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டிவி பார்ப்பது மட்டுமல்லாமல், பராமரிப்பு (Care), தகவல் தொடர்பு (Communication) அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களின் பயன்பாட்டை எளிதாக்க, எல்.ஜி. Easy TV சில சிறப்பான மாற்றங்களுடன் வருகிறது.
ஹோம் ஸ்கிரீன் (Home Screen) மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் தெளிவாகப் படிக்க, பெரிய எழுத்துரு அளவுகள் (Larger font size) கொடுக்கப்பட்டுள்ளன. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரிமோட் கன்ட்ரோலில், எழுத்துகள் பெரிதாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் சேனல் மாற்ற வசதியாக, ரிமோட்டிலேயே வெளிச்சம் தரும் பேக்லிட் வசதியும் உள்ளது. மிக முக்கியமான அம்சம், இதில் உள்ள 'உதவி பட்டனை' அழுத்தினால், பயனர்கள் எந்தத் திரையில் இருந்தாலும், இதற்கு முன் பார்த்த சேனலுக்கு உடனடியாகத் திரும்ப முடியும்.
சிறப்பம்சங்கள்
வீடியோ கால் வசதி: இதில் கேமரா மற்றும் காக்காவோ டாக் (KakaoTalk) ஒருங்கிணைப்பு இருப்பதால், குடும்ப உறுப்பினர்களுடன் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
அவசர உதவி: ரிமோட்டில் ஒரு பட்டன் உள்ளது! அவசர காலங்களில், அதை அழுத்தினால் குடும்பத்தாருக்கு உதவி கோரிக்கை (Help Request) மெசேஜ் அனுப்ப முடியும்.
நினைவூட்டல்: மருந்து உட்கொள்ள வேண்டிய நேரத்தை நினைவூட்டுதல், கால அட்டவணை அறிவிப்புகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ரிமோட் மூலமே டிவியைக் கட்டுப்படுத்தும் வசதி போன்ற பல 'பராமரிப்பு அம்சங்கள்' இதில் உள்ளன.
போர்ட்டபிள் வயர்லெஸ் திரையான StanbyME போன்ற புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி சந்தையை மாற்றியமைத்த எல்.ஜி, இப்போது மூத்த குடிமக்கள், தனியாக வசிப்பவர்கள், புதுமணத் தம்பதிகள் போன்ற பிரிவுகளுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதன் மூலம் தனது "லைஃப்ஸ்டைல் டிவி வியூகத்தை" (Lifestyle TV Strategy) மேலும் வலுப்படுத்துகிறது. தற்போது, இந்த LG Easy TV ஆனது 65-இன்ச் மற்றும் 75-இன்ச் ஆகிய 2 பெரிய மாடல்களில் கிடைக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.