/indian-express-tamil/media/media_files/2025/08/27/blood-moon-2-2025-08-27-18-10-53.jpg)
இன்றிரவு அபூர்வ சந்திர கிரகணம்- ரத்த நிலா: உங்க ஸ்மார்ட்போனில் துல்லியமாக படம்பிடிப்பது எப்படி?
அரிய வானியல் நிகழ்வான முழு சந்திர கிரகணம், இன்றிரவு நிகழவுள்ளது. சந்திர கிரகணம் (அ) ரத்த நிலா (Blood Moon) என்று அழைக்கப்படும் இந்த கிரகணம், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் பார்க்கக்கூடிய அரிய நிகழ்வாகும்.
சந்திர கிரகணம் 2025: நேரம் மற்றும் காணக்கூடிய இடங்கள்
அறிக்கைகளின்படி, இந்த சந்திர கிரகணம் இன்றிரவு 8:58 PM IST மணிக்குத் தொடங்கும். கிரகணத்தின் உச்சக்கட்டமான முழு கிரகண நேரம், 11:41 PM IST மணிக்கு நிகழும். இந்த நிகழ்வு நாளை (செப்.8) அதிகாலை 1:42 AM IST மணிக்கு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 3 மணி 28 நிமிடங்கள் நீடிக்கும் இந்த நிகழ்வை, வானியல் ஆர்வலர்கள் எந்தவிதமான சிறப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கண்களால் காணலாம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்த சந்திர கிரகணம் ஆசியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தெரியும். இந்தியாவில், டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் இந்த சந்திர கிரகணத்தை தெளிவாகக் காண முடியும். இந்தியாவில் 2025-ம் ஆண்டில் தெரியும் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். அடுத்த கிரகணம் மார்ச் 2026-ல் நிகழும்.
ரத்த நிலா என்றால் என்ன?
முழு சந்திர கிரகணத்தின்போது, நிலா பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு அல்லது செப்பு நிறத்தில் தோன்றுவதால், இது பொதுவாக ரத்த நிலா என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு ரேலீ சிதறல் (Rayleigh scattering) என்ற ஒளிச்சிதறல் தத்துவத்தின் காரணமாக ஏற்படுகிறது. இதே தத்துவம் தான் வானம் நீல நிறமாக தோன்றுவதற்கும் காரணம்.
சந்திர கிரகணத்தின்போது, சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருகின்றன. அப்போது சூரிய ஒளியானது பூமியின் வளிமண்டலம் வழியாகச் செல்லும்போது, நீலம் மற்றும் ஊதா போன்ற குட்டையான அலைநீளங்கள் சிதறிவிடுகின்றன. ஆனால் சிவப்பு மற்றும் ஆரஞ்சு போன்ற நீளமான அலைநீளங்கள் பூமி வளிமண்டலத்தால் வளைக்கப்பட்டு சந்திரனை நோக்கிச் செல்கின்றன. இந்த வடிக்கப்பட்ட ஒளியானது சந்திரனை ஒளிரச் செய்து, அதற்கு தனித்துவமான சிவப்பு நிற தோற்றத்தை அளிக்கிறது. இந்த கிரகணத்தின் போது, நிலவு வழக்கத்தை விட சுமார் 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தோன்றும்.
சந்திர கிரகணத்தை புகைப்படம் எடுப்பது எப்படி?
இந்த அரிய நிகழ்வை புகைப்படம் எடுக்க விரும்பும் ஆர்வலர்களுக்கு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் DSLR கேமராக்களுக்கான சில அமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நீண்ட எக்ஸ்போஷர் (Long Exposure) உங்கள் கேமராவை 1-2 வினாடி நீண்ட எக்ஸ்போஷரில் அமைக்கவும். ISO சிவப்பு நிற ஒளியைப் பிடிக்க, ISO-வை 400-800 ஆக சரிசெய்யவும். ஜூம் (Zoom) முழு கிரகணத்தின் போது (இரவு 11:00 PM - 12:22 AM IST), சந்திரனின் மேற்பரப்பு மற்றும் அதன் பள்ளங்களை தெளிவாகப் படம் பிடிக்க ஜூம் செய்யவும்.
மத மற்றும் கலாச்சார முக்கியத்துவம்
இந்தியாவில், இந்த சந்திர கிரகணம் கலாச்சார மற்றும் மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாரணாசி, அயோத்தி போன்ற நகரங்களில் உள்ள கோயில்கள், கிரகண நேரத்தில் சடங்குகளுக்காக மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் முதல் லண்டன் வரை உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்கள் இந்த அற்புதமான வானியல் நிகழ்வைக் காணத் தயாராகி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.