உயிர் வாழத் தேவையான ஆக்சிஜன் செவ்வாய் கிரகத்தில் உள்ளது

இந்த ஆக்சிஜன் அளவைக் கொண்டு பூஞ்சைகள் மற்றும் பல்செல் உயிரினங்கள் வாழ இயலும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் : செவ்வாய் கிரகத்தில் பிற உயிரிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா என சர்வதேச அளவில் வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை செயற்கை கோள் புகைப்படங்கள் உறுதி செய்தன.

தற்போது அங்கு உயிர் வாழ்வதற்கு தேவையான மற்றொரு ஆதாரமான உயிர்வளி எனும் ஆக்சிஜன் வாயு இருக்கிறதா என்ற ஆராய்ச்சியினை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படும் உப்பு நீரில் நுண்ணுயிரிகள் உயிர்வாழத் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதாக தற்போது வெளியான ஆய்வறிக்கைகள் உறுதி செய்துள்ளன.

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் நுண்ணியிரிகள் வாழ போதுமானது

தற்போது இருக்கும் ஆக்சிஜன் அளவானது, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு பூமிப்பந்தில் உயிரினங்கள் உருவாவதற்கு இருந்த அளவு ஆக்சிஜன் தற்போது செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஆக்சிஜன் அளவைக் கொண்டு பூஞ்சைகள் மற்றும் பல்செல் உயிரினங்கள் வாழ இயலும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கலிபோர்னியாவில் இருக்கும் ஆய்வகத்தின் இயக்குநர் வ்லாடா ஸ்டாமென்கோவிக் இது குறித்து குறிப்பிடுகையில் “செவ்வாய் கிரகத்தில் இருந்து பெறப்பட்ட நீரில் அதிக அளவு உப்பு இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்தில் ஒரு செல் உயிரினங்கள் சுவாசிப்பதற்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதாகவும் கூறியிருகிறார். இது நாள் வரையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகத்தில் எந்த ஒரு உயிரினமும் வாழ்வதற்கு போதுமான அளவு ஆக்சிஜன் இல்லை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில், கால நிலைகளுக்கு ஏற்றவாறு வெப்பநிலை -195 டிகிரி முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close