Whatsapp end-to-end encryption: உலகெங்கிலும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தப்படுகிறது. அதனால், இந்த குறுந்செய்தி தளத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளத்தில் பரிமாறப்படும் அனைத்து செய்திகளும் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படுகிறது என்றும் மூன்றாம் தரப்பினரால் (வாட்ஸ்அப் உட்பட) அணுக முடியாது என்றும் மீண்டும் மீண்டும் பதித்து வருகிறது வாட்ஸ்அப். இருப்பினும், பிரபல பாலிவுட் நடிகர்களின் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் கசிந்த சில சமீபத்திய சம்பவங்கள் வாட்ஸ்அப் பற்றிய முற்றிலும் வேறுபட்ட கோணத்தைச் சொல்கின்றன.
கடந்த சில வாரங்களாக, மும்பையில் நடந்து வரும் போதைப்பொருள் விசாரணையைத் தொடர்ந்து மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கில் சம்பந்தப்பட்ட பாலிவுட் நடிகர்களின் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் கசிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இது மிகப்பெரிய மெசேஜிங் தளத்தில் நண்பர்கள் மற்றும் பிறருடன் தனிப்பட்ட செய்தி பகிர்தலின் தனியுரிமை குறித்து வாட்ஸ்அப் பயனர்களிடையே கவலையை எழுப்பியுள்ளது. இவ்வாறு குறுஞ்செய்திகள் கசிந்த போதிலும், வாட்ஸ்அப் அதன் இயங்குதளம் பாதுகாப்பானது என்றும் end-to-end encrypted என்றும் கூறுகிறது.
“வாட்ஸ்அப்பில் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் செய்திகள் end-to-end encryption மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதனால்தான் நீங்கள் மற்றும் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் மட்டுமே அனுப்பப்பட்ட செய்தியைப் படிக்க முடிகிறது. இடையில் யாரும் அதனை அணுக முடியாது. வாட்ஸ்அப் உட்பட. தொலைபேசி எண்ணை மட்டுமே பயன்படுத்தி மக்கள் வாட்ஸ்அப்பில் பதிவு செய்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வது முக்கியம். மேலும், உங்கள் செய்தி உள்ளடக்கத்தை வாட்ஸ்அப் என்றைக்கும் அணுக முடியாது" என்று வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஊடகத்திற்குக் கொடுக்கப்பட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
குறுந்செய்திகள், ஆவணங்கள் மற்றும் பிற அனைத்து மீடியா ஃபைல்களும் உள்ளடக்கிய வாட்ஸ்அப் பேக்-அப் (Backup), ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் கூகுள் டிரைவிலும், ஐபோன்களுக்கான ஐக்ளவுடிலும்தான் நடைபெறுகிறது என்பதையும், இதில் வாட்ஸ்அப்பின் கைகளில் எதுவும் இல்லை என்பதையும் பயனர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
சாதனத்தில் சேமிக்கப்பட்ட உள்ளடக்கத்தை மூன்றாம் தரப்பினர் அணுகுவதைத் தடுக்க வலுவான கடவுச்சொற்கள் (Password) அல்லது பயோமெட்ரிக் ஐடிகள் போன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தப் பயனர்களை வாட்ஸ்அப் ஊக்குவிக்கிறது என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“end-to-end encryption, நீங்கள் மற்றும் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் மட்டுமே உங்களுக்குள் பகிரப்பட்ட தகவல்களைப் படிக்க முடியும் என்பதை உறுதிசெய்கிறது. இடையில் வாட்ஸ்அப் உட்பட யாரும் அணுக முடியாது. உங்கள் செய்திகள் 'லாக்' வசதிகளுடன் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், பெறுநர் மற்றும் உங்களால் மட்டுமே அதனைத் திறந்து, செய்திகளைப் படிக்க முடியும்" என்று end-to-end encryption-ஐ விளக்கும் ஓர் பிலாக் பற்றி வாட்ஸ்அப் தரப்பினர் கூறுகின்றனர்.
“கூடுதல் பாதுகாப்பிற்காக, நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்திக்கும் தனித்துவமான 'லாக்' மற்றும் 'திறவுகோல்' உள்ளது. இவை அனைத்தும் ஆட்டோமேட்டிக் நிகழ்வுதான். அதாவது, உங்கள் செய்திகளைப் பாதுகாக்க செட்டிங்ஸ் பகுதியை இயக்கவோ அல்லது சிறப்பு ரகசிய சாட் (Chat) அமைக்கவோ தேவையில்லை" என்று நிறுவனம் கூறுகிறது. வாட்ஸ்அப்பில் end-to-end encryption ஆப்ஷன் எப்போதும் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இந்த அம்சத்தை நிராகரிப்பதற்கு எந்த வழியும் இல்லை.
சில பாலிவுட் நடிகர்களின் கசிந்த குறுஞ்செய்திகளைப் பொருத்தவரை, இணையத்தில் பரவி வரும் தீபிகா படுகோன் மற்றும் ஷ்ரதா கபூரின் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மொபைல் போன் குளோனிங் நுட்பத்தின் உதவியுடன் என்சிபி (Narcotics Control Bureau -NCB) அணுகியதாகக் கூறப்படுகிறது. இந்த நுட்பம் புதிதல்ல. பல ஆண்டுகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொபைல் ஃபோன் குளோனிங் நுட்பத்தில், டேட்டா மற்றும் சாதனத்தின் செல்லுலார் அடையாளத்தை புதிய தொலைபேசியில் நகலெடுக்க முடியும். சில செயலியின் உதவியுடன், குளோன் செய்ய வேண்டிய தொலைபேசியை அணுகாமலே இதைச் செய்யமுடியும். இந்த செயல்பாட்டில், IMEI-ன் பரிமாற்றமும் நடக்கலாம். மொபைல் ஃபோன் குளோனிங்கை பொது மக்கள் மேற்கொள்வது சட்டவிரோதமானது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், என்சிபி போன்ற அதிகாரிகள், சாதனங்களில் சேமிக்கப்பட்ட தரவை சட்டப்பூர்வமாக அணுக தடயவியல் வழியைத் தேர்ந்தெடுக்க முடியும். எந்தவொரு குளோன் செய்யப்பட்ட தொலைபேசியும் iCloud அல்லது கூகுள் ட்ரைவில் சேமிக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.