/indian-express-tamil/media/media_files/2025/09/13/diella-from-albania-2025-09-13-09-28-01.jpg)
ஆனா, இது புதுசா இருக்குனே… ஊழலை ஒழிக்க முதல் ஏ.ஐ. அமைச்சர்: அல்பேனியா அரசு அதிரடி முடிவு
உலகில் முதன்முறையாக, அல்பேனியா செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சரை நியமித்துள்ளது. 'டியெல்லா' (Diella) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மெய்நிகர் அமைச்சர், குறியீடு மற்றும் பிக்சல்களால் ஆனது. இவர் பொதுத்துறை கொள்முதல் நடவடிக்கைகளைக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
முன்னதாக, அல்பேனியாவின் பிரதமர் எடி ராமா, ஒருநாள் தனது நாட்டில் ஒரு டிஜிட்டல் அமைச்சர் அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) பிரதமர் இருப்பார் என்று கூறியிருந்தார். ஆனால், இவ்வளவு விரைவில் அது சாத்தியமாகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த வியாழக்கிழமை, செப்.11 அன்று, தலைநகர் டிரானாவில் நடந்த சோசலிஸ்ட் கட்சியின் கூட்டத்தில், பிரதமர் ராமா இந்த ஏ.ஐ. அமைச்சரை அறிமுகப்படுத்தினார். டியெல்லா, அரசாங்கத்தில் மனிதரல்லாத ஒரே உறுப்பினராக இருக்கிறார். “டியெல்லா உடல்ரீதியாக இங்கே இல்லை, ஆனால் ஏ.ஐ.-யால் உருவாக்கப்பட்ட முதல் உறுப்பினர்” என்று பிரதமர் ராமா தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிப்பதே முக்கிய நோக்கம்
அல்பேனியாவில் பொது நிர்வாகத்தில், குறிப்பாக அரசு கொள்முதல் துறையில், ஊழல் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஊழல் மற்றும் லஞ்சம் ஆகியவற்றைக் குறைக்கும் நோக்கத்துடன், இந்த ஏ.ஐ நியமிக்கப்பட்டுள்ளது. டியெல்லா, அரசாங்கம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யும் அனைத்து பொது ஒப்பந்தங்களையும் மதிப்பீடு செய்து, அவற்றை வழங்கும் பணியை மேற்கொள்ளும். இந்த ஏ.ஐ. அமைச்சர், நாட்டின் டிஜிட்டல் சேவைகள் போர்டல் வழியாக ஏற்கனவே பொதுமக்களுக்குச் சேவை செய்து வருகிறார் என்றும், குரல் கட்டளைகள் மூலம் நிர்வாக கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் கூறப்படுகிறது.
டியெல்லா, ஒப்பந்தங்களை மதிப்பீடு செய்யும் உரிமையைப் பெற்றுள்ளதுடன், உலகம் முழுவதும் திறமையான நபர்களைத் தேர்ந்தெடுக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஏ.ஐ-யை மனிதர்கள் எவ்வாறு மேற்பார்வை செய்வார்கள் என்பது குறித்த விவரங்களை அல்பேனிய அரசு இன்னும் வெளியிடவில்லை. இந்தச் செயல், அரசாங்க பணிகளில் ஏ.ஐ-யை எவ்வாறு திறம்படப் பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், சில பாதுகாப்புப் பிரச்னைகள் ஏற்படலாம் என்ற அச்சங்களும் நிலவுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.