மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி, வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் மற்றும் மெசேஜ்ஜில் 3D Avatar-ஐ உருவாக்கி அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை போஸ்ட் பதிவிடுகையில் ஸ்டிக்கர் பிரிவிலும், புரோபைல் பிக்சரிலும் தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவதாரில் உள்ள முக வடிவத்தை, நிஜத்தை போலவே உருவாக்கிட அட்ஜேஸ்ட் செய்யும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாற்றுதிறனாளிகளுக்காக, காதுகேட்கும் கருவி, வீல் சேர் போன்ற அம்சங்களை சேர்க்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
மெட்டாவின் அவதார் பிரிவு பொது மேலாளர் ஐகெரிம் ஷோர்மன் வலைத்தள பக்கத்தில், "கனெக்ட் 2021 இல் மெட்டாவர்ஸ் அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சியை அடைய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும் அன்பானவர்களுடன் ஒரே அறையில் நீங்கள் அமரக்கூடிய எதிர்காலத்தை நோக்கி உருவாக்குகிறோம்" என்றார்.
இந்த அவதார் உருவாக்கும் வசதி, தற்போது அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பதற்கான அறிவிப்பு தேதி இதுவரை வெளியாகவில்லை.
தாய் நிறுவனமான மெட்டா, பேஸ்புக் மற்றும் மெசேஞ்சரில் புதுப்பிக்கப்பட்ட அவதார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Facebook,Messenger இல் உள்ள அவதாரங்களில் செய்யப்படும் மாற்றங்கள், Instagram அவதாரங்களிலும் பிரதிபலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் விருப்பத்தின் பேரில் பல்வேறு அவதார்களை உருவாக்கிக்கொள்ளலாம்.
மெட்டா சிஇஓ மார்க் கூறுகையில், " மெட்டா அவதார்களில் கூடுதல் ரியாக்ஷன்கள், முக தோற்றம், ஸ்கீன் கலர் போன்றவையும், வீல் சேர் மற்றும் காது கேட்கும் கருவி ஆகியவை வடிவமைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆடைகளை பரிசோதனை செய்யவும் தொடங்கியுள்ளோம்.Quest, Facebook, Instagram மற்றும் Messenger ஆகிய தளங்களில், அவதாரை உபயோகித்து கொள்ளலாம்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil