அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு முன்னணி ஐ.டி நிறுவனங்களில் கடந்தாண்டு இறுதி மற்றும் இந்தாண்டு தொடக்கத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்து அறிவித்தனர். ட்விட்டர், கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான், டிஸ்னி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்தனர். செலவீனக் குறைப்பு, பொருளாதார பிரச்சனை காரணமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவித்தன.
அந்தவகையில் கடந்தாண்டு இறுதியில் மெட்டா குறிப்பிட்ட சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. 18 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பணிநீக்கம் செய்வதாகவும் மெட்டா தெரிவித்தது. இந்தநிலையில் புதிய சுற்று பணி நீக்கங்களுக்கு மெட்டா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில் மறுசீரமைப்பு மற்றும் ஆட்குறைப்பு, செலவீனக் குறைப்பு முயற்சியாக புதிய சுற்று பணி நீக்கத்தை திட்டமிடுகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்தது. கடந்த ஆண்டு, 13% - 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை மெட்டா பணி நீக்கம் செய்தது.
தற்போது உள்ள உயர் அதிகாரிகளை சற்று குறைவான பதவியில் பணியமர்த்தவும் மெட்டா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய பணி நீக்கம் குறித்து மெட்டா பதிலளிக்க மறுத்துவிட்டது. ஆனால் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க்கின் அறிக்கைகள் மேலும் பணி நீக்கம் பற்றி குறிப்பிடுவதாக வட்டரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும். ஜுக்கர்பெர்க் இந்த மாத தொடக்கத்தில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில், கடந்த ஆண்டு பணிநீக்கம் "செயல்திறன் மீதான எங்கள் கவனத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு அல்ல" என்று கூறினார்.
கொரோனா தொற்று காலத்தில் வீடுகளில் முடங்கி இருந்தபோது நுகர்வோர் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தினர். இதன் காரணமாக மெட்டா அதிக ஆட்களை பணியமர்த்தியது. ஆனால், 2022-இல் இது குறைந்தது. இதனால் வர்த்தம் கடுமையாக பாதிக்கப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் 1 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான பங்குகள் வைத்திருந்த மெட்டா, இப்போது 446 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. மெட்டா பங்குகள் புதன்கிழமை 0.5% குறைந்தது.
சேலஞ்சர், கிரே & கிறிஸ்மஸ் இன்க் என்ற நிறுவனத்தின் அறிக்கைபடி, ஜனவரி மாதத்தில் மட்டும் அமெரிக்க நிறுவனங்கள் 100,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/