மொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த விண்டோஸ் இயங்குதளம் விரைவில் ஷட் டவுன் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு விண்டோஸ் 10 இயங்குதளத்தைக் கொண்ட மொபைல்களுக்கான ஆதரவு நிறுத்தப்படும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக செக்யூரிட்டி அப்டேட்கள் தொடங்கி அனைத்து விதமான அப்டேட்களும் இனிமேல் விண்டோஸ் 10 இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்குக் கிடைக்காது.
மேலும் அதன் பிறகு சில வசதிகள் சரியாக இயங்காமலும் போகவும் வாய்ப்புள்ளது. இறுதியாக விண்டோஸ் 10 மொபைல் இயங்குதளப் பதிப்பானது கடந்த 2015-ம் ஆண்டில் வெளியானது. ஒரு சில விண்டோஸ் மொபைல்கள் மட்டுமே அதை ஏற்றுக் கொண்டு இயங்க ஏற்றதாக இருந்தன. கடந்த சில வருடங்களாகவே விண்டோஸ் மொபைல்களுக்கான வரவேற்பு குறைந்து கொண்டே சென்றது. எனவே தற்பொழுது இறுதியாக இந்த முடிவை மைக்ரோசாஃப்ட் எடுத்துள்ளது.
மேலும் இது தொடர்பாக விரிவான தகவல்கள் அதன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 'ஆதரவு நிறுத்தப்படுவதன் காரணமாக ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஸ் இயங்குதளத்தைக் கொண்ட சாதனத்திற்கு மாறிக்கொள்ளுங்கள்' எனவும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பயனாளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.
விண்டோஸ் 10 மொபைல் வெர்ஷன் 1709, இந்தாண்டு டிசம்பர் 10 வரை சப்போர்ட் செய்யும் எனவும், விண்டோஸ் 10 மொபைல் வெர்ஷன் 1703 கொண்ட லூமியா 640 XL வரும் ஜூன் 11 வரை சப்போர்ட் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.